பின்பற்றுபவர்கள்

புதன், 30 ஜூன், 2010

தீபச்செல்வனின் : ‘பாழ் நகரத்தின் பொழுது’ : கவிதைப் புத்தகம் வெளியீடுகாலச்சுவடு பதிப்பகம் மற்றும் தமிழியல் இணைந்து நடத்தும்

தீபச்செல்வனின்

‘பாழ் நகரத்தின் பொழுது’

கவிதைப் புத்தகம் வெளியீடு

 
03.07.2010 சனிக்கிழமை

இடம் : இக்சா மையம்

கன்னிமரா நூலகம் எதிரில், எழும்பூர், சென்னை.நூல் வெளியிடுபவர் : கவிஞர் பெருந்தேவி

பெற்றுக்கொள்பவர் : ஆவணப்பட இயக்குனர் சோமிதரன்
__________________________________________

“இன்றைய ஈழத்துக் கவிதைகளில் வலுவான குரல்களில் ஒன்றாக உணரப்படும் தீபச்செல்வனின் புதிய தொகுப்பு இது.

பல பதிற்றாண்டுகளாக விடுதலைக் கனவைப் பேணிய ஓர் இனம் யுத்தத்தால் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் மானுடர்களின் துயரையும் இன்னும் பற்றிக் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இந்தக் கவிதைகள் பேசுகின்றன ”

(காலச்சுவட்டிற்காக சுகுமாரன், திருவனந்தபுரம், கேரளா)

“பாழ் நகரத்தின் பொழுது” தீபச்செல்வனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு. இத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் பெரும்பான்மையானவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை. யாழ்ப்பாணம் எப்போதும் அச்சப்பிராந்தியமாகவே இருந்து வந்திருக்கின்றது. அதன் பிரதான வாயிலான ஏ-9 வீதி நிரந்தரமற்ற கனவின் இழையில் தொங்கிக்கொண்டேயிருக்கின்றது. சமாதான காலத்தில் சொர்க்கத்தின் வாயிலாக இருந்த இந்த வழி , யுத்தப் பிரகடனத்திற்காக மூடப்பட்ட போது மரணத்தின் இரும்புத் திரையானது. யுத்தம் மீண்டும் ஆரம்பித்தபோது யாழ்ப்பாணத்திற்கான உணவு விநியோகம் உட்படப் பலவும் பாதிக்கப்பட்டிருந்தன. முற்றிலும் இராணுவமயமான அன்றைய யாழ்ப்பாணத்தில் எப்போதும் மரணத்தின் நிழல் சதா அலைந்து கொண்டேயிருந்தது”

(பாழ் நகரத்தின் பொழுது : முன்னுரை : சித்தாந்தன், யாழ்ப்பாணம்)

“பாழடைந்த நகரத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட என்னுடன் பழகுவது சேர்ந்து திரிவது எல்லாமே அபாயமான விடயமாகிய பொழுது நிறையப்பேர் என்னை விட்டு ஒதுங்கிய பொழுது எனக்கு ஆறுதல் அன்பு தந்த நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். என்னுடன் அச்சுறுத்தும் நகரத்திற்கு வந்தவர்கள், தங்கள் சைக்கிள்களில் ஏற்றித் திரிந்தவர்கள், அவர்கள் என்னை பாதுகாக்கும் சுவரைப்போல என்னைச் சுற்றி நின்றார்கள”

(பாழ் நகரத்தின் பொழுது : என்னுரை : தீபச்செல்வன், கிளிநொச்சி)
__________________________

இந்த வெளியீட்டு நிகழ்வில் காலச்சுவடு பதிப்பகம் மற்றும் தமிழியல் இணைந்து ஈழத்தைச்சேர்ந்த எட்டு படைப்பாளிகளின் நூல்கள் வெளியிடுகின்றன
__________

சனி, 1 மே, 2010

யும் பாடலும் நிறைந்திருந்த இனிய வாழ்வு இல்லம் இப்பொழுது சிதைந்து போயிருக்கிறது

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்


அந்தப் பிள்ளைகளிடம் இருக்கும் வலிமை எங்களிடம் இருப்பதில்லை. அவர்களிடம் இருக்கும் ஒளி எங்களிடமிருப்பதில்லை. அவர்களிடம் இருக்கும் பாடல் எங்களிடம் இருப்பதில்லை. அவர்களிடம் இருக்கும் மொழி எங்களிடமிருப்பதில்லை. இப்படி எங்கள் தேசத்தின் நம்பிக்கை ஊட்டுகிற இனிய வாழ்வு இல்லத்தின் பிள்ளைகளை அன்று சந்திக்க நேர்ந்தது.

இனியவாழ்வு இல்லத் தலைவர் ராஜ்குமார் புதுவருடத்திற்கு முதல்நாள் மாலை நேரம், பிள்ளைகள் அணியும் புதுவருடத்திற்கான ஆடைகளை வேண்டிக் கொண்டு, கைதடியில் தற்காலிகமாக உள்ள விழி செவிப்புலனற்ற பிள்ளைகளின் இல்லத்தில் தங்கியிருக்கும் தனது பிள்ளைகளுக்கு வழங்குவதற்காக வந்து கொண்டிருந்தார். அந்தப் பிள்ளைகள் மகிழ்வுடன் இருக்க வேண்டும், நாளைய புதுவருடத்தை மகிழச்சியுடன் தொடங்குவதற்காய் கொண்டாட வேண்டும் என்று ராஜ்குமார் செலுத்தும் அன்பும் அக்கறையும் மிகவும் மதிக்கப்பட வேண்டியது.

1997இல் மாசிலாமணி என்ற விழிப்புலனற்றவரால் இந்த இல்லம் தொடங்கப்பட்டது. கிராமசேவையாளராக இருந்த மாசிலாமணி தனது சொந்த முயற்சியால் விழிப்புலனற்று செவிப்புலனற்று ஆதரவற்று அலைந்த குழந்தைகளை தேடி தனது இல்லத்தில் சேர்த்து வந்தார். ஓலைக் கொட்டில் ஒன்றில் எட்டுப் பிள்ளைகளை சேர்த்துக் கொண்டு அந்த இல்லத்தை அவர் தொடங்கினார். நாளடைவில் மாற்று வலுவுள்ள பிள்ளைகள் தங்கள் படிப்பு மற்றும் எதிர் காலம் என்பவற்றை கருதி இனிய வாழ்வு இல்லத்தில் சேர்ந்து கொண்டார்கள். இந்த பிள்ளைகள் எமது சமூகத்தில் தங்களை அடையாளங் காட்டுவது அல்லது அதன் ஓட்டத்தில் எப்படி இணைத்து செல்லுவது என்ற உபாயங்களை அவர்கள் இனிய வாழ்வு இல்லத்தில் பெற்றுக் கொள்ளுகிறார்கள்.பல்கலைக்கழகத்தில் இந்த இல்லத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்தார்கள். உண்மையில் அவர்கள் நாங்கள் படிக்கும் விடயங்கள் குறித்து எழுப்பும் கேள்வி அது பற்றி கொண்டிருக்கும் எழுச்சிகரமான எதிர்பார்ப்பு என்பன எங்களிடமிருக்கும் சோம்பலைபோல இருப்பதில்லை. அது ஆழமான கேள்விகளை கொண்டது. எப்பொழுதும் விழித்திருக்கும் ஆர்வத்தின் பாற்றப்பட்டது. விரிவுரைகளின் பொழுது நாங்கள் எங்கோ நிற்க அவர்கள் வகுப்பறைக்குள் எப்பொழுதும் நிற்பார்கள். அப்படியான உபாயங்களையும் விழிப்பு நிலைகளையும் அவர்கள் கொண்டிருந்தார்கள். அவர்களின் விசேடமான அளுமையாக அவை இருக்கின்றன.

இனிய வாழ்வு இல்லத்தில் படித்த மாணவர்களில் பலர் 2000 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை எழுதினார்கள். பின்னர் உயர் தரம் படித்த பிள்ளைகளில் யசோதரன், அனுராதா, சிவகுமார், இராஜகுமார் என நான்கு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். விழிபுலனற்ற இந்த மாணவர்கள் பல்கைலக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தது இனியவாழ்வு இல்லம் கொண்டிருந்த நம்பிக்கையை பகிரங்கமாக வெளிப்படுத்தியது. நம்பிக்கையின் அர்த்தம் வெளித் தெரிந்தது. இதில் சித்தியடைந்த யசோதரன் என்ற விழிப்புலனற்ற சிறுவன் எங்கோ இருக்கிறான் என்பதை அறிந்த மாசிலாமணி பாய்ந்து கொண்டிருக்கும் பாலியாற்றைக் கடந்து சென்று அவனை இல்லத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தார். யசோதரன் போன்ற மாணவர்கள் இப்படி சாதனை செய்திருப்பதை மாசிலாமணி அவர்கள் தாய் தந்தையாக இருந்து அந்த வெற்றியில் ஆறுதல் பெற்றுக் கொண்டிருந்தார். தொடர்ந்து 2003இல் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த ப.இராசகுமார், அ. சந்திரகுமார், ஆ. நகுலேஸ்வரன் முதலானவர்களும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி தற்பொழுது படித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்பொழுது 9 மாணவர்கள் உயர்தரத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இப்படி தனது பயணத்தை வெற்றிகரமாக இனியவாழ்வு இல்லம் நடத்திக் கொண்டிருந்தது. போர் எப்பொழுதும் இரையாக்கிக் கொண்டிருந்த வன்னிப் பெருநிலத்தில் முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் இனியவாழ்வு இல்லம் ஆரம்பித்து இயங்கிக் கொண்டிருந்து. வன்னியில் லட்சக்கணக்கானவர்கள் நிலம் பெயர்ந்து அலையத் தொடங்கிய பொழுது தனது பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு மாசிலாமணி நடக்கத் தொடங்கினார். அப்பொழுது 150 வரையான பிள்ளைகள் இந்த இல்லத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பிள்ளைகள் தங்களிடமிருந்த பொருட்களை எல்லாம் சுமந்து கொண்டு அலையத் தொடங்கினார்கள். சில பிள்ளைகளின் கண்களுக்கு அங்கு நடந்த கொடுமையான சண்டைகள், இரத்தங்கள், சதைகள் தெரியாமலிருந்தன. எதுவும் தெரியாமல் அவற்றின் கொடுமையான ஓசைகளை கேட்டபடி அவர்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். சில பிள்ளைகள் குண்டுகளின் சத்தங்கள், ஷெல்களின் சத்தங்கள், அழுகைகள் என்பனவற்றை கேட்காமல் எந்தச் சத்தமுமில்லாது தங்களுக்கும் முன்னால் நடக்கும் கொடுமைகளை பார்த்தபடி அவற்றுக்கு உள்ளாக்கப்பட்டபடி சென்று கொண்டிருந்தார்கள்.

வழியில் காயங்களுக்கும் மரணங்களுக்கும் முகம் கொடுத்தபடி அவர்கள் செல்லுகிறார்கள். அந்த பிள்ளைகளை காத்து வந்த மாசிலாமணி அவர்கள் ஷெல் தாக்குதலினால் பலி கொள்ளப்படுகிறார். பிள்ளைகள் ஆதரவற்று அனாதைகளாகின்றனர். இறுதியில் சமர் மிகத் தீவிரம் அடையும் பொழுது பெற்றோர்களுடன் பிள்ளைகள் எல்லோரும் சிதறியபடி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்லுகிறார்கள். இப்பொழுது ஏற்கனனே பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மேலும் பாதிப்புக்களுடன் இழப்புக்களுடன் எங்கெங்கோ இருக்கிறார்கள். அவர்களை இணைத்து மீண்டும் இல்லத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ராஜ்குமார் தொடங்கியிருக்கிறார்.

ராஜ்குமார் யாழ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். மாசிலாமணியின் ஆத்மா அமைதியடைய வேண்டும் என்றால் அந்த இல்லத்தை மீள உருவாக்க வேண்டும் விழிபுலனற்ற செவிப்புலனற்ற பிள்ளைகள் படித்து அவர்களின் எதிர் காலம் பயன் பெற வேண்டும். அதற்காக என் வாழ்வை முழுமையாக அர்பணிப்பேன் என்று கூறுகிறார். இனியவாழ்வு இல்லம் என்னை அப்படியான ஒரு மனிதனாகவே வளர்த்திருக்கிறது என்று கூறும் ராஜ்குமாரின் கதையோ மிகுந்த துயரமானது.ராஜ்குமார் யுத்தத்தினால் தனது பார்வையை இழந்தவர். அம்பலகாமத்திலிருந்து இராணுவம் ஷெல்களை வீசும் பொழுது அந்த ஷெல் வீச்சில் ராஜ்குமாரின் தந்தை பலி கொள்ளப்பட்டார். பின்னர் தாயாரும் நோயாளியாக இறந்து போயிருந்தார். அதன் பிறகு வீட்டுக்கு ஒரே பிள்ளையான ராஜ்குமார் ஆதரவற்ற அனாதைச் சிறுவனாகி விடுகிறார். 5ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டு மாடு மேய்க்கும் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் மாடு மேய்க்கும் பொழுது ஷெல் தாக்குதலில் அவரது இரண்டு கண்களும் காயத்திற்கு உள்ளாகி பார்வை இழந்து போய்விட்டது.

கண்களை இழந்து இனிய வாழ்வு இல்லத்திற்கு வந்து சேரும் ராஜ்குமார் அந்த இல்லம் அவருக்கு கொடுத்த நம்பிக்கை செறிந்த கல்வியால் சாதாரண தரம் உயர்தரம் என்று படித்து சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகினார். இப்பொழுது அதன் இயக்குனராகி சிதைந்த இல்லத்தை மீள ஒருங்கிணைக்கவும் அல்லது சிதறுண்ட பிள்ளைகளை மீள இணைக்கவும் தனது பணிகளை தொடங்கியிருக்கிறார். சில பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் இருக்கிறார்கள். யாரும் இல்லாதவர்களும் இழப்புக்களை சந்தித்தவர்களும் இப்பொழுது கைதடியில் உள்ள இல்லம் ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார்கள். எங்கள் பிள்ளைகள்; உடுப்பதற்கு உடுப்பில்லாமல், உண்பதற்கு உணவு இல்லாமல், இருப்பதற்கு இடமில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று ராஜ்குமார் மிக வேதனையுடன் குறிப்பிடுகிறார்.

அவர்கள் தற்காலிகமாக தங்கியுள்ள அந்த இல்லத்தில் புதிய ஆடைகளை பெறுவதற்காக பிள்ளைகள் எல்லோரும் ஒன்று கூடியிருக்கிறார்கள். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாய்பேசாத பிள்ளைகள் உரையாடும் மொழி மனதை அவர்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தது. அவர்களின் உடையின் அளவு, உடைகளின் விருப்பம் போன்றவற்றுக்கு ஏற்ப அவர்களுக்கான உடைகள் வாங்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு முன்னால் நான் பேசும் பொழுது தைரியத்தை இழந்து போயிருந்தேன். நீங்கள் தைரியமானவர்கள், ஒளி பொருந்தியவர்கள். பாடல் நிறைந்தவர்கள், உங்களிடமிருக்கும் தைரியம், ஒளி, பாடல் என்னிடம் இல்லை என நான் மிக மனம் கலங்கி சில வார்த்தைகளை பகிர்ந்தேன். நான் சொல்லுபவற்றை வாய்பேசாத குழந்தைகளுக்கு பிரமிளா என்ற கண் பார்வை குறைந்த பிள்ளை ஒன்று அவர்களுக்குரிய மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.அவர்கள் ஒவ்வொருவரும் என்னுடன் உரையாடத் தொடங்கினார்கள். விஜலாதன் என்ற மாணவன் இப்பொழுது சாதாரண தரத்தில் படித்துக் கொண்டிருக்கிறான். அவனின் தந்தை சுதந்திரபுரத்தில் (2009.01.23) இடம்பெற்ற ஷெல்தாக்குதலினால் உயிரிழந்து போனார். அண்ணா பிறப்பிலேயே கால் வலுவற்றவர். தம்பி, அக்கா, இவர்களுடன் அம்மா கொக்குவிலில் தற்காலிக வீடு ஒன்றில் தங்கியிருக்கிறார் என்று அவர் சொல்லுகிறார். விஜயலாதன் மிதிவெடியை எடுத்து விளையாடும் பொழுது அது வெடித்தவேளை தனது கண் பார்வையை இழந்து போயிருக்கிறார். கிளிநொச்சி கனிஷ்ட மகா வி;த்தியாலத்தில் படித்த விஜலாதன் இப்பொழுது குற்றெழுத்து முறையை கற்றுக் கொண்டு படிப்பதாக கூறுகிறார்.

சாதாரண தரம் படிக்கும் இன்னொரு மாணவன் விக்கினேஸ்வரன் ஒன்பது வயதான சிறுவன் ஒருவன் இறுதி யுத்தத்தில் தன்னை மாதிரி கண்களை இழந்து போயிருந்தான் என்றும் அதைப் போல நிறையப் பேர் கண்களை இழந்தவர்கள் இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டான். கண்கள் தெரியாமல் போனதால் அவர்களுடன் நெருக்கமாக பழகியிருப்பதாகவும் இப்பொழுது அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை ஆனால் அவர்கள் மீள முல்லைத்தீவில் இனியவாழ்வு இல்லம் தொடங்கும் பொழுது அங்கு வருவார்கள் அப்பொழுது சந்திப்பேன் என்று நம்பிக்கையுடன் குறிப்பிடுகிறார்.

விக்கினேஷின் வார்த்தைகள் கடும் நம்பிக்கை கொண்டிருந்தன. அவரின் முகத்தில் ஒளியின் பிரகாசம் தெரிந்தது. கண்கள் இழந்ததைப் பற்றி கவலைப்பட மாட்டேன். அதற்காக தற்கொலை செய்வது எல்லாம் தேவையற்ற செயல். கவலைப் படுவதால் இழந்தது மீளக் கிடைத்து விடுமா? எல்லோரையும் போல என்னால் வாழ முடியும். எல்லோரையும் போல என்னால் முன்னேற முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மற்றவர்கள் வியக்கும் மனிதனாக வேண்டும். மற்றவர்களின் துயரை துடைக்க நான் செற்படுவேன் என்றும் விக்னேஷ் குறிப்பிடுகிறான்.

வினோதினி என்ற விழிபுலனற்ற சகோதரி இனியவாழ்வு இல்லத்தில் மிகவும் சிறந்த பாடகியாக இருந்தார். அவர் இப்பொழுது காலில் காயப்பட்டு கால் அகற்றும் நிலையில் உள்ளார். இப்படி வலிகளின் மீது வலிகளுடன் இனியவாழ்வு இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அலைகின்றனர்.


நாங்கள் எங்கள் இல்லத்தை திரும்ப எங்கள் சொந்த நிலத்தில் அமைக்க விரும்புகிறோம் என்று இல்லத்தின் இயக்குனர் ராஜ்குமார் சொல்லுகிறார். அதற்காக சொந்த இடத்தில் இல்லத்தை மீள் குடிமயமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ராஜ்குமார் கோரிக்கை விடுக்கிறார். சிதைந்த இல்லத்தை மீளமைத்து இந்த பிள்ளைகளை அங்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். முன்பு தமிழர் புனழ்வாழ்வுக் கழகம், மனிதநேயம், அரச சார்பற்ற நிறுவனங்கள், புலம்பெயர் உறவுகள், புலம்பெயர் நிறுனவங்கள், கிளிநொச்சி அரசாங்க அதிபர் முதலியோர் தமக்கான உதவிகளை வழங்கியதாக குறிப்பிடும் ராஜ்குமார் இப்பொழுது இல்லத்தின் குழந்தைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நிரந்தரமான வழிகளை செய்ய யாராவது முன்வர வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

யுத்தத்தின் பொழுது இரண்டு கஜேஸ் வாகனங்களும் இரண்டு ஆட்டோக்களும் தொலைந்து போய் விட்டன. அங்கு அமைத்த இல்லம் சிதைந்து விட்டது. இப்படி அவற்றை மீளமைத்து எங்கள் பிள்ளைகள் மீள வாழுவதற்காக இவர்கள் அவசியமான உதவிகளை எதிர்பார்க்கிறார்கள். இப்பொழுது எமது பழைய பிள்ளைகளை கொண்டு எங்களைத் தேடி பெற்றோர்கள் வருகிறார்கள். அவர்களுடன் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களும் இந்த இல்லத்திற்கு புதிதாய் இணைகிறார்கள்.

யுத்தமும் காலமும் இவர்களை பிரித்து இவர்களிடமிருந்த வளங்களை அழித்து விட்டது. இனிய வாழ்வு இல்லப் பிள்ளைகளை காயங்களுக்கு உள்ளாக்கி விட்டது. மேலும் அங்கங்களினை பாதித்த பிள்ளைகளை உருவாக்கியிருக்கிறது. அந்தப் பிள்ளைகள் தங்களுக்கான கல்வியைப் பெற்று எதிர்காலத்தை வளம்படுத்த இந்த இல்லம் மீள கட்டமைக்கப்பட வேண்டியது மிக அவசியமானதாயிருக்கிறது. இந்த மனிதாபிமான விடயத்தில் கருணையுள்ளவர்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியதன் பாரிய பொறுப்பிருக்கிறது.

இனியவாழ்வு இல்ல இயக்குனர் : ராஜ்குமாரின் தொலைபேசி 0771102405

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

சூழ்ச்சிகளுடன் வரும் தேர்தல் – என்ன செய்யப் போகிறோம் : தீபச்செல்வன்நாங்கள் சிக்கி முக்கி தவிக்கும் ஒரு யுத்தத்தின் தொடர்ச்சியாகத்தான் நமக்கு முன்னால் வரும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கைகளும் நடக்கின்றன. எதையும் மீட்டிப் பார்க்க முடியாத சுதாகரிக்க முடியாத யுத்தம். தமிழ் அரசியல் தலமைகள் என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பத்தை ஏற்படுத்திய சூழல். ஈழப் போராட்டத்தை எப்படி அடுத்த கட்டம் முன்னெடுக்கப் போகிறோம்? அதற்கான அடுத்த கட்டப் பணிகளை முன்னெடுக்கும் நேர்மையானவர்கள் யார்? ஏன்ற கேள்விகள் எமக்கு முன்னால் விளைந்திருந்தன. ஈழத் தமிழ் இனத்தை அதன் காலத்தை அதன் வாழ்வை முழுக்க முழுக்க கேள்விக்குள்ளாக்கிய பேரினவாத அரச யுத்தம் மற்றும் அதனுடைய நோக்கம் என்பன யுத்தத்தின் பின்னரும் தன் அழிப்பு நடவடிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. ஈழ மக்களின் அடுத்த கட்டத்தை நகர்த்தும் பணி எனபது வெறுமனே கட்சி அரசியல் சார்ந்த நடவடிக்கை அல்ல. அது ஒரு போராட்டமாகவே தொடருகின்றது.

இப்பொழுது நமக்கு முன்னால் உள்ள பாரிய சவால்களும் சூழ்ச்சிகளும் நிறைந்த பாராளமன்றத் தேர்தலை இந்த அடிப்படையில்தான் கையாள வேண்டும். அறுபது வருடகால போராட்ட வாழ்வில் முப்பது வருடகால ஆயுதப் பேராட்ட அனுபவத்தில் எமக்கு இந்த மனநிலை வராது, மீளவும் எமக்குள் பிளவுகளும் கரிபூசல்களும், தவறான கையாளுகைகளும் ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கின்ற விடயங்களாக இருக்கின்றன. எமக்குள் முன்பு ஏற்பட்ட அதே பிளவுகள் இன்று இன்னும் ஏற்படுகின்றன. அதே பிளவுகள் இன்னும் தொடருகின்றன. எல்லாவற்றுக்குமான விலையையும் எமது மக்கள் தங்கள் வாழ்விலிருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்து தமிழ் மக்களின் கனவு பலியாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ் அரசியல் தரப்புக்கள் எல்லாமே அரசாங்கத்திற்கு ஒரே பார்வையில்தான் தெரிகின்றன. நாங்கள் அணிந்திருக்கும் ஆடைகள் வெவ்வேறாக தெரியலாம். வரும் வழிகள் வெவ்வேறாக தெரியாமல். ஆனால் அரசு எந்த வழியால் வந்தாலும் சிதைப்பதற்கான பொறிகளை வழிகளில் நிரப்பி வைத்திருக்கிறது. இந்தப் பொறிகளை அடையாளம் கண்டு பயணம் செய்ய வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. இந்தப் பொறிகள் நமது வழியை பல வகையில் சிதைக்கின்றன. இங்கு தான் நாம் பெரிய தவறுகளை இழைக்கிறோம். மக்களின் எதிர்பார்ப்புகளில் இருந்துதான் மக்களின் கனவுகளில் இருந்தூன் அரசியலை அதன் சித்தாந்தத்தை வழிகளை தொடங்க வேண்டும். போராடும் மக்களுக்கு உரிய அரசியல் இந்த வகையில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால் முழுக்க முழுக்க சுயநலன்களும் அதிகாரங்களின் நிகழ்ச்சிகளையும் நிறைவேற்றும் அரசியலை எமது மக்களின் இடையில் முன்னெடுக்க முயல்வது தோல்விக்கு முன்னான நடவடிக்கைகளாகும்.

இந்தத் தேர்தல் நமது அறுபது வருடகால போராட்டத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. கடந்த காலங்களில் எமது மக்கள் சிந்திய குருதி, கொடுத்த உயிர்கள், இழந்த வாழ்வு, சொத்துக்கள், தியாகம் செய்த காலம் இவற்றை எல்லாம் தவிடு பொடியாக்கும் நடவடிக்கைகளில்தான் இந்த தேர்தலை நாம் கையாளுகிறோம். இவற்றை நிராகரிக்கிறோம். இவற்றுக்கு மாறாக செயல்படுகிறோம் என்பதுதான் இதன் அர்த்தமாயிருக்கிறது. எமது மக்கள் ஏன் தேர்தல் கூட்டங்களில் பங்குபெற தயங்குகிறார்கள்? வாக்களிக்க தயங்குகிறார்கள்? போராட்ட சூழலில் வாழ்ந்த மக்கள் ஒரு தேர்தலை எதிர் கொள்ளும் பொழுது அது கொண்டிருக்கும் நிலமைகள் அதைச் சுற்றியிருக்கும் சூழ்ச்சிகள் எல்லாம் மக்களது எண்ணங்களுக்கு மாறாக இருப்பதனால்தான். தமிழ் தேசியம், சுயநிர்ணயம், தாயகம் இந்த விடயங்களை தமிழர்கள் என்றும் கைவிட முடியாது. அதைக் கைவிட்டு யாரும் அரசியல் பேச முடியாது. அப்படியொரு நிலையில் அதையே துருப்புச் சீட்டாக வைத்து நமக்குள்ளான உள் முரண்பாடுகள் வளர்ந்திருக்கின்றன. நாங்கள் ஏற்கனவே பிளவுபட்டவற்றை ஒட்ட வைக்க முயற்சிக்கும் பொழுது அதற்காக விரும்பும் பொழுது எமக்குள் புதிய பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தொடக்கம் ஆபத்தானது. சிங்கள பேரினவாதத்தின் புத்திக்கு பல உள் நடவடிக்கைகளை தூண்டத் தக்கது.

மக்கள் கேட்கிறார்கள் ஏன் பிரிந்தார்கள்? ஏன் அவர்களை வெளிறே விட்டார்கள்? மாறி மாறி சேறு பூசுவதுதான் நமக்கு இப்பொழுது தேவையானதா? மிக அருவருப்பு ஊட்டும் பிரசாரங்களை எந்த அர்த்தமுமற்ற வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்ற முனைபவர்கள் தான் இந்தத் தேர்தலில் தமது ஆசனங்களை இலக்காக வைத்திருக்கிறார்கள். தமிழர்களுக்காக தமிழர்களாக வாழுவதுதான் முதலாவது அவர்களது வாக்குறுதிகளது உன்மைதன்மை. சிங்களப் பேரினவாத அரசோ அல்லது அதிகாரத்தையும் தன் பொருளாதார அரசியல் நலன்களையும் கண்ணாகக் கொண்ட சர்வதேசமோ புரிந்து கொள்ளா விட்டாலும் மக்களை புரிந்து கொள்ளுவதுதான் வாக்குறுதிகளின் உன்மைதன்மை. மக்கள்மீது சுயநலன் பொருந்திய அரசியல் வழிமுறைகளை திணிப்பது அல்ல.

முக்கியமான தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் இந்த முரண்பாடுகளும் சேறு பூசல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அரசாங்கத்தால் இறக்கப்பட்ட ஆளும் கட்சியினரும் அரசாங்கத்தால் இறக்கப்பட்ட சுயேட்சை கட்சிகளும் களத்தில் பல நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன. சந்தர்ப்ப வாத தந்திரங்களை கையாள முனைகின்றன. அதற்கு நம்மில் பலர் பலியாகியிருக்கிறார்கள். கடந்த காலங்களில் எமது சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாக முக்கியமானவர்களாக இருந்த பலர் இதில் பலியாகியிருக்கிறார்கள். தமிழ் அரசியல் வலுவை சிறடிக்கும் இந்த வேலைகளில் இறங்கியிருப்பவர்களை மக்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இதில் மக்களும் ஆழமாக புரிந்து செயற்பட வேண்டிய தேவையிருக்கிறது.

எனவே இந்தத் தேர்தல், கட்சிகளுக்கும் மக்களுக்கும் வாக்குகளுக்கும் போராட்டத்திற்கும் இடையிலான தொடர்பை அர்த்தத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தும் வகையில் நமக்கு முன்னால் வந்திருக்கிறது. அறிவுபூர்வமாக தந்திரோபயமாக கீறல் விழாத வகையில் அர்ப்பணிப்புக்களுடன் இதைக் கையாள வேண்யிருக்கிறது. இதுவரை முன்னெடுக்கப்பபட்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக அது நகர வேண்டும என்ற அவசியம் தான் இங்கு முக்கியம் பெறுகிறது.

ஆக இதுவரையான எமது காலத்தையும் போராட்டத்தையும் வாழ்வையும் பேரினவாத அரசின் சூழ்ச்சிகளிடமிருந்து மீட்க வேண்டிய மாபெரும் சவாலுடன், எமது மக்களின் முன்னால் இந்தத் தேர்தல் களம் விரிந்திருக்கிறது.

தீபச்செல்வன்

நன்றி : ஆனந்தி ஏப்பிரல் 2010

வியாழன், 8 ஏப்ரல், 2010

சிங்களவர்கள் எங்களது கஷ்டங்களைப் பார்க்க சந்தோஷமாக வருகிறார்கள் - தீபச்செல்வன்
ஈழ மக்களின் இன்றைய துயர நிலையை, தொடரும் சோகத்தைச் சொல்லும் தீபச்செல்வன் ‘ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’, ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் மூலம் தமிழ் இலங்கிய உலகிற்கு அறிமுகமாகிய இளஞ்கவிஞர். ‘தீபம்’ என்ற தனது வலைப்பதிவில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஈழம் குறித்து நிறைய எழுதி வருகிறார். யுத்த பூமியின் சாட்சியாக ஈழத்தில் இன்றும் வசித்து வருகிறார். அவர் தொடர்ந்து இப்படி குறிப்பிடுகிறார்.

கிளிநொச்சியை நான் விட்டு இறுதியாய் திரும்பும் பொழுது அது கொண்டிருந்த செழிப்பையும் வலிமையையும் நினைவு கொண்டு பார்கிறேன். ஆனால் இன்று அந்த அற்புத நகரம் முழுவதும் சிதைந்து போயிருக்கிறது. இடிபாடடைந்த ஒரு நகரத்திற்கு நான் சென்றேன். இராணுவ மயமும் இராணுவ நடமாட்டமும் என்று பயங்கரம்தான் மிகுந்திருக்கிறது.

எனக்கு சிறிய வயதிலிருந்தே தெரிந்த ஒரு சகோதரி. அவர்கள் 1990 இல் இடம்பெயர்ந்திருந்தார்கள். பின்னர் 1996 இலும் இட்மபெயர்ந்து எங்களுடன் வந்திருந்திருந்தவர்கள். அந்த சகோதரியின் கணவன் 2001 இல் நடைபெற்ற சமர் ஒன்றில் வீரமரணம் அடைந்திருந்தார். அப்பொழுது அவருக்கு ஒரு பெண்குழந்தை இருந்தது. பின்னர் அவருக்கு ஒரு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவரை பார்த்த பொழுது பெரு அதிர்ச்சியே ஏற்பட்டது. ஒரு கண்ணை இழந்து உடல் முழுவதும் பெருங் காயங்களுடன் மரத்தின் கீழாக சமைத்துக்கொண்டிருந்தார். கிடைத்த சில மரக்கறிகளையும் நிவாரணமாக தரப்பட்ட அரிசியை கழுவி உலையில் போட்டுக் கொண்டிருந்தார்.

அவருக்கு இரண்டாவது திருமணத்தின் பொழுது பிறந்த பெண் குழந்தையும் முதலில் பெண் பிறந்த குழந்தையும் கணவனும் சகோதரனும் இறுதி யுத்ததில் பலியாகியிருந்தார்கள். அவரது தலையுள்ளும் ஷெல் துண்டுகள் நுழைந்த நிலையில் எடுக்க முடியாதிருக்கின்றன. மறதிகளும் அழுகைகளும் என்று இன்று தனித்துப்போயிருக்கிறார். சகோதரனை இழந்த துக்கத்தில் எப்பொழுதும் அழுது புலம்பும் தாயுடன் அவர் சிதைந்துபோன வீட்டை மீள பொறுக்கி கட்டிக்கொண்டிருக்கிறார். இதுவரையில் அவர் முகாமிலிருந்து விடுவிக்கப்படவில்லை. தடுப்பு முகாமில் இருந்து இரண்டு நாட்கள் அம்மாவுடன் தங்க அனுமதி கேட்டு வந்த அவர் மறுநாள் தடுப்பு முகாமுக்கு திரும்ப வேண்டும்.

தனக்கு கண்கள் வேண்டாம் என்று கூறிக்கொண்டேயிருநந்தார். வாழ்வை தொடங்க வாழ பிடிப்பற்று பேசிக்கொண்டிருந்தார். தன் குழந்தைகளையும் பறிகொடுத்த வேதனையை சொல்லிக் கொண்டிருந்தார். நடந்து வரும் பொழுது மூத்த குழந்தை ஷெல் பட்டு அப்படியே இறந்து விழுந்து விட்டது எனவும் கடைசிக் குழந்தை காயத்துடன் தூக்கி வைத்திருந்த பொழுது கையிலேயே இறந்து விட்டது எனவும் சொல்லிக்கொண்டிருந்தார் அவரது தாயார். அந்த குழந்தைகளின் புகைப்படத்தை எடுத்து பார்த்துக் கொண்டேயிருந்தார். எந்த வருமானமும் அற்ற நிலையில் தந்த நிவாரணப் பொருட்களை அவித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தந்த தகரங்களை ஒரு சில தடிகளில் பொருத்தி விட்டு இருக்கிறார்கள். எங்கும் பற்றைகள்தான் வளர்ந்து காடாகியுள்ளது. முகாமிலிருந்து கொண்டு வந்த சில பொருட்கள் வெளியில் கிடக்கின்றன. வந்திருக்கும் மக்கள் எல்லோருமே கொண்டு வந்த பொருட்களை மரங்களின் கீழாகவும் தகரத்திற்கு கீழாகவும் போட்டு விட்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சமர்கள் நடந்த இடம் என்பதால் மண்மூடைகளும் மண் அரண்களும் எங்கும் கிடக்க குண்டுகளில் நிலம் எரிந்து போயிருந்தது. அந்த நிலத்தில் என்ன பயிரை நாட்ட முடியும்? என்னுடன் வந்த கிளிநொச்சி கணேச புரத்தை சேர்ந்த நண்பன் இவற்றையெல்லாம் எப்பொழுது உழுது விதைக்க முடியும் அதற்கு அனுமதி எப்பொழுது கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டு வந்தான். வன்னி மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியிருக்கும் மக்கள். கையில் பணம் இல்லை. விவசாய உபகணரங்கள் இல்லை. கைவிடப்பட்ட தொழிலை எப்படி தொடங்குவது என்று தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

கிளிநொச்சி நகரத்தில் சில கடைகள் இப்பொழுது மீள திறக்கப்பட்டிருக்கின்றன. அங்கு தமிழில் எழுதப்பட்ட கடைகளின் பெயர்களை வெள்ளை வண்ணம் பூசி படையினர் மறைத்து அழித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் அலுவலகங்களை உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டுள்ளதுடன் அவைகளை படையினர் தம் சொந்த தேவைகளுக்கு எடுத்துள்ளனர்.

எப்பொழுது வன்னி நிலத்தில் இயல்பு வரும் என்று தெரியவில்லை. அங்கு எப்பொழுது மக்கள் முழுமையாக அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை. முழுக்க முழுக்க படைகளின் கட்டுப்பாட்டில் அல்லது ஆட்சியில் வன்னி இருக்கிறது. அவர்களின் முழுப் பாவனையில் இருக்கிறது.

தமிழர்களின் நிலமை இப்படியிருக்க சிங்களவர்கள் நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் வடக்கை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்களவர்களுக்கு வடக்கு, பார்க்கத் துடிக்கும் சுற்றாலாத் தளமாக தென்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி என்று எங்குமே சுற்றுலா வரும் சிங்களவர்களின் மயமாகவே இருக்கிறது. பேருந்துகளிலும் கஜேஸ் வாகனங்களிலும் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள்.

சிங்களவர்கள் இங்கு வந்து பார்ப்பவை எல்லாம் யுத்ததில் சிதைந்த நிலத்தையும் அதில் பாதிக்கப்பட்ட மனிதர்களையும்தான். முழுக்க முழுக்க முப்பதாண்டு யுத்த சிதைவுகளுடன் இருக்கும் ஈழத்தை அவர்கள் பார்க்கிறார்கள். அவைகளில் தங்கள் படைகள் நிகழ்த்திய வீரதீரங்களை பார்க்கிறார்கள். அகதிகளாக அலையும் மக்களை பார்க்கிறார்கள். அங்கங்களை இழந்து வலியுறும் மக்களை அவர்கள் பார்க்கிறார்கள்.

இப்படி சுற்றுலா வரும் சிங்கள மக்களை பெரும் குதூகலத்துடன் அவர்களின் படைகள் வரவேற்கின்றனர். சிங்கள மக்களும் பெரும் மகிழ்ச்சியுடன் படைகளை சந்திக்கிறார்கள்.

அவர்கள் ஒரு பௌத்த நிலத்திற்கு வருவதைப்போல உணருவார்கள். அவர்கள் ஒரு பௌத்த நகரத்திற்கு வருவதைப்போல உணருவார்கள். அல்லது ஒரு சிங்கள நிலத்திற்கு வருவதைப்போல உணருவார்கள். அவர்கள் ஒரு சிங்கள நகரத்திற்கு வருவதைப்போல உணருவார்கள். வன்னி நிலமெங்கும் புத்த சிலைகளை படையினர் நட்டு வைத்திருக்கிறார்கள். அங்கு வழிபாடுகள் நாள் தோறும் நடைபெறுகின்றன. விடுதலைப் புலிகளிடமிருந்து வன்னி நிலத்தை கைப்பற்றிய உடனே இந்த புத்த சிலைகளை நாட்டுவதில் படையினர் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள். யாழ்ப்பாணம் நாகவிகாரை, நயினாதீவு விகாரை, மாதகல் விகாரை என்று பல இடங்கள் சிங்களவர்கள் வந்து வழிபடும் சுற்றுலாத் தலங்களாக மாறியிருக்கின்றன.

எமது மக்கள் இன்னும் வீடுகளுக்கு திரும்பவில்லை. அவர்களுக்கு வீடுகளும் இல்லை. சிதைந்து உருத்தெரியாமல் கிடக்கிறது வாழ்வு. எப்படி எதை வைத்து தொடங்குவது என்று தெரியாத கையறு நிலையில் இருக்கிறார்கள். கால்வாசி மக்களை தவிர மீதி மக்கள் வன்னி நிலத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. தெரு ஓரங்களில் அனுமதிக்கப்பட்ட மக்கள் தகரங்களை நிலத்தில் நட்டு அதற்குள் வாழ்கிறார்கள். புழுதியும் வெக்கையும் நுளம்பும் இருட்டும் என்று வாழ்க்கை பயங்கரமானதாக தொடருகிறது.

தீபச்செல்வன்

நன்றி குமுதம் 31.03.2010

செவ்வாய், 23 மார்ச், 2010

எழுத்தாளர் சார்க் கூடல் கலந்து கொள்ளவில்லை -அடுத்த வருடம் நடைபெறும் மாநாட்டுக்கு நிச்சயமாக நான் கலந்து கொள்கிறேன்
 
அன்பின் AJEET

தாங்கள் என்னை எழுத்தாளர் மாநாட்டுக்கு அழைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அதற்காக எனது அன்பான நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு இந்த மாநாட்டுக்கு வர முடியாத துர்பாக்கிய நிலையிருப்பதை தங்களுக்கு அறிவிப்பதில் மிகவும் கவலையடைகிறேன்.

நான் தற்பொழுதுதான் படிப்பை நிறைவு செய்து விட்ட இன்னும் ஒரு வேலை கிடைக்காத நிலையில் உள்ளேன். எனது குடும்பமான தாயாரும் சகோதரி ஒருவரும் இன்னும் சொந்த ஊருக்குச் செல்லாமல் தடுப்பு முகாமிலேயே உள்ளார்கள். ஏற்கனவே பொருளாதார நிலையில் மிகவும் மோசமாக இருந்தேன். எனது சில புலம்பெயர்ந்த - எழுத்தாளர் - நண்பர்களது உதவியுடன்தான் எனது படிப்பை முடித்திருக்கிறேன். இந்த நிலையில் என்னால் தங்கள் மாநாட்டுக்கு கலந்து கொள்ள முடியாத நிலமையிருக்கிறது. இதனாலேயே பயண கடவுச் சீட்டைக்கூட என்னால் பெற முடியாதிருந்தது. பதில் அனுப்புவதற்கும் தயக்கமாக இருந்தது.

அடுத்த வருடம் நடைபெறும் மாநாட்டுக்கு நிச்சயமாக நான் கலந்து கொள்கிறேன். அதற்கான உங்கள் அழைப்புக்காக காத்திருப்பதுடன் இம்முறை பகிர வேண்டிய என் உணர்வுகளை அடுத்த வருடன் அங்கு பகிர்ந்து கொள்வேன். இதனால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிக்க வேண்டும். நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

LOVE

DEEBACHELVANDEAR AJEET COUR,

I FEEL VERY HAPPY TO RECEIVE YOUR KIND INVITATION FOR THE WRITERS' CONFERENCE. IT IS REALLY UNFORTUNATE THAT I AM NOT IN A POSITION TO ACCEPT IT WHICH MAKES ME FEEL REAALY SAD.i HAVE JUST NOW FINISHED MY COLLEGE STUDIES AND AM YET TO GET A JOB. MY MOTHER AND YOUNGER SISTER WHO ARE MY FAMILY ARE STILL LANGUISHING IN THE DETENTION CAMP. EVEN PREVIOUSLY WE WERE NOT A FINANCIALLY SOUND FAMILY AND IT WAS WITH THE HELP OF MY FRIENDS AND WELL-WISHERS LIVING ABROAD THAT I COULD CONTINUE AND COMPLETE MY HIGHER STUDIES. IN THIS SITUATION I AM NOT IN A POSITION TO COME TO THE CONFERENCE.IN FACT MY SITUATION IS SUCH THAT I HAVE NOT BEEN ABLE TO GET MY PASS-PORT TOO. I FELT RATHER EMBARASSED TO SEND YOU THIS REPLY.

NEXT YEAR I WILL DEFINITELY TAKE PART IN THE WRITERS' MEET. I WILL BE EAGERLY WAITING FOR YOUR INVITATION NEXT YEAR AND WILLINGLY SHARE WITH THE AUDIENCE ALL THAT I HAVE WANTED TO SHARE WITH THEM. I SINCERELY FEEL SORRY FOR THE INCONVENIENCE CASUED BY ME TO YOUR GOODSELF IN THIS REGARD AND I WISH THE CONFERENCE A GREAT SUCCESS.

LIVING IN THE HOPE THAT THINGS WOULD IMPROVE.

WITH REGARDS

YOURS SINCERELY

DEEBACHELVAN

Cc: ANAR

தீபம் ஆங்கிலத்தளம் புதிய தளவமைப்பில் வருகிறது


தீபம் http://edeebam.blogspot.com/ ஆங்கிலத்தளம் புதிய வடிவமைப்பில் வருகிறது. இதற்கான வழிகாட்டல் உதவிகளை செய்தவர் பெண்ணியம் தள எடிட்டர் அவருக்கு எனது அன்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்தத்தள வடிவமைப்பு குறித்த உங்கள் அபிப்பிராயங்களை எதிர்பார்க்கிறேன்.

இவ்வண்ணம் தீபச்செல்வன்

புதன், 20 ஜனவரி, 2010

‘குழந்தைகள் அழுதுகொண்டேயிருக்கிறார்கள்’ - கவிதைக்கு தமிழ்மணம் விருது

விருதுகள் மற்றும் போட்டிகளில் பங்கு கொள்வது எனக்கு அவ்வளவு விருப்பமாய் இருப்பதில்லை. தமிழ்மணம் விருது 2009 க்கான பேட்டி அறிவிப்புகள் தமிழ்மணத்தால் மின்னஞ்சல் செய்யப்பட்டிருந்தது. அந்த மின்னஞ்சல் காரணமாகவே அந்தப் போட்டியில் நுழைந்திருந்தேன். படைப்பிலக்கிய பிரிவில் ‘குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கிறார்கள் ’ – கவிதை முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த கவிதை வெற்றி பெற வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் இந்த போட்டியை நடத்திய தமிழ்மணம் தளத்திற்கும் முதலில் என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

இந்தக் கவிதைக்கு விருதுகிடைத்த பொழுது இந்தக் கவிதை எழுதிய சூழ்நிலையும் சம்பவமும்தான் எனக்கு முன்னால் வந்து நிற்கிறது. பல்கலைக்கழகத்திற்கு தடுப்பு முகாம்களிலிருந்து மாணவர்களைக்கொண்டு வந்து இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். இந்தக் கவிதை எழுதிய (செம்டம்பர் 03 2009) நாட்களில் தடுப்புமுகாம்களிலிருந்து மாணவர்களை எடுப்பது மிகுந்த சிரமாக இருந்தது. அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாகவே மாணவர்களை விடுவித்துக்கொண்டிருந்தது. எங்கள் பல்கலைக்கழக துணைவேந்தரும் நானும் (செயலாளர் - பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்) பிரசன்னாவும் (தலைவர் - பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்) அமைச்சர்களிடமும் அரச அதிபரிடமும் இறுதியில் ஜனாதிபதியிடமும் பசில்ராஜபக்ஷவிடமும் சென்று இவர்களை விடுவிக்க கோரிக்கொண்டிருந்தோம். மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக 9 பேர், 10 பேர் முதல் 90 பேர், 50 பேர் என விடுவிக்கப்பட்டார்கள்.

வன்னியில் நடந்த பலவந்தமான ஆட்சேட்பிலிருந்து தப்பித்துக்கொள்ளுவதற்காக பல்கலைக்கழக மாணவர்களில் அநேகமானவர்கள் திருமணம் முடித்திருந்தார்கள். அதனால் கைகளில் குழந்தைகளுடன் வந்தார்கள். சிலர் தங்கள் கணவன்மார்களை போர்க்களத்திலும் வழியிலும் பலிகொடுத்திருந்தார்கள். சில மாணவிகளின் கணவர்மார் போராளிகளுக்கான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். முகம் கொள்ள முடியாத வலியையும் கதைகளையும் கொண்டு இந்த மாணவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். கணவன் ஒரு பேருந்திலும் மனைவி ஒரு பேருந்திலும் கணவன் விடுவிக்கப்பட்டு மனைவி விடுவிக்கப்படாமலும் மனைவி விடுவிக்கப்பட்டு கணவன் விடுவிக்கப்படாமலும் என்று பிரிவுகளுக்கும் வலிகளுக்கும் ஆளாகிக்கொண்டிருந்தார்கள்.

மாணவர்கள் நாளுக்கு நாள் விடுவிக்கப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் அந்தப் பணிகளில்ல நாங்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுது கஜீபனா என்ற மாணவி என்னிடத்தில் வந்து தான் தன் குழந்தையை தடுப்புமுகாமில் கணவருடன் விட்டு வந்திருப்பதாகவும் குழந்தை தன்னைப் பிரிந்து நோய்வாய்ப்பட்டு அழுது அழுது தொண்டை காய்ந்து விட்டது என்றும் தன் குழந்தையை தன்னிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டார். கஜீபனா துக்கத்தில் உறைந்துபோயிருந்தார். அவரும் குழந்தையைப்போல அழுது தொன்டை காய்ந்து சொற்களற்றிருந்தார். துணைவேந்தருக்கு அறிவித்து இதற்கு நடவடிக்கை எடுக்க தொடங்கினாலும் அன்றைய சூழ்நிலையில் மிகுந்த சிரமமானதாக இருந்தது.

யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவதாக இருந்தால் இராணுவத்தினரின் பயண அனுமதி தேவை. தடுப்பு முகாமில் இருந்து வந்த மாணவி ஏன் உடனே அங்கு திரும்பிச் செல்லுகிறார் என்ற கேள்வியை கட்டாயம் இராணுவம் கேட்க வாய்ப்pருந்தது. இது ஒட்டுமொத்த வன்னி அகதி மாணவர்களை பாதிக்கலாம். இருந்தும் அரச அதிபர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு ஊடாக பசில்ராஜபக்ஷவுக்கு அறிவித்து கோரிக்கை விடுத்திருந்தோம். சில நாட்களாக மீண்டும் மீண்டும் கண்ணீரும் இறுகிய முகமுமாக கஜீபனா வந்து சென்ற பொழுதே இந்தக் கவிதையை எழுதியிருந்தேன். நீண்ட நாட்களின் பின்னர் குழந்தையும் கணவரும் கஜீபனாவுடன் சேர்க்கப்பட்டது.

குழந்தையை பிரிந்து கழித்த அவரது துயர் மிகுந்த நாட்களுக்கு பிரிய நேர்ந்த அவரது தாய்மைக்கு எமது மக்களை நிர்பந்தித்த அந்த சூழ்நிலைக்கு இந்த கவிதை சமர்ப்பணமாக எழுதப்பட்டிருந்தது. இந்த விருது என்பது கஜீபனாவின் துயர்மிகுந்த நாட்களை மீட்டிப் பார்ப்பதற்கும் அவர் தன குழந்தையை அடைந்த மகிழ்ச்சியைப் பறிமாறிக்கொள்வதற்கும் அணைத்து பதிவர்களையும் இந்தக் கவிதையுடன் இணைத்திருக்கிறது.


தீபச்செல்வன்

இரண்டு பேய்கள் - நிறைவேற்று அதிகாரத்திற்கான யுத்தம்


தீபச்செல்வன்இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர்கள் யுத்தத்தால் பட்ட காயங்கள் ஆறுவதற்கு முன்பே தற்போதைய ஜனாதிபதி மகி;தாராஜபக்ஷே ஜனாதிபதித் தேர்தலை அறிவித்திருக்கிறார். இன்று முகாங்களிற்குளிருந்து அகதிகள் எண்ணி எண்ணி விட்படுகிறார்கள். தங்கள் சொந்த நிலங்களில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள்மீது யுத்தம் நடத்தி, பலவந்தமாக தடுப்புமுகாங்களுக்குள் அடைத்து வைத்துவிட்டு அவர்களை அரசாங்கம் விடுவித்துக்கொண்டிருக்கிறது. இறுதி யுத்தமும் தடுப்பு முகாங்களும் இந்த்தேர்தலும் பல விடயங்களை வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவும் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பென்சேகாவும் ஈழத் தமிழர்களின் வாக்குகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதைப்போல’ யுத்தத்தால் பாதிக்கப்ட்ட ஈழ மக்களின் வாழ்வில் இந்த அரசியல் ஏகபோக அதிகாரப் போட்டி பெரும் துன்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

மகிந்தராஷபக்ஷக்கு முற்றிலும் அவர் எதிர்பார்த்திராத நெருக்கடிநிலையொன்று தோன்றியிருக்கிறது. ஈழத்தமிழ் மக்களை வகைதொகையற்று அழித்து யுத்த வெற்றியைப் புசித்து தன் புன்னகையை நாடெங்கும் சுவரொட்டிகளால் ஒட்டி கொண்டாடிக் கொண்டிருந்தவர் இப்படியொரு நெருக்கடி வருமென்று நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். ஈழத் தமிழ் மக்களை முகாங்களில் வைத்துக்கொண்டு அவர்களை வெளியில் விடாதும் உறவினர்களை சந்திக்க கடுமையான விதிகளை போட்டுக்கொண்டும் வன்னிப் பெருநிலத்தின் அடையாளங்களை முழுமையாக அழிக்கும்பொழுதும் இந்த நாட்டின் நிரந்தர ராஜா தான் என்றே நினைத்துக் கொண்டிருந்தார். சிலவேளை வருகிறதேர்தலிலும் மகிந்தவே வென்று ஜனாதிபதியாகலாம். ஆனால் இந்த நாட்கள் அவரை கடுமையாக வருத்திக்கொண்டிருக்கிறது.

தேர்தலில் இருவரும் வாக்குறுதிகளை வழங்கத் தொடங்கியுள்ளார்கள். நிறைவேற்று ஜனாதிபதி உரிமையை இல்லாமல் செயது தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை தரப்போவதாக பொன்சேகாவும், ஜனாதிபதித்தேர்தலின் பின் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்று மகிந்தராஜபக்ஷவும் சொல்லுகிறார்கள். இலங்கைத் தீவில் காலம் காலமாக தமிழ் மக்கள் ஏமாறறப்பட்டுக்கொண்டு வருகிற சூழலில் ஈழமக்கள் எதையும் நம்ப முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள். ஈழ மக்களுக்கு ஒரு மிகுந்த சங்கடமான தேர்தலாக இந்தத் தேர்தலும் வந்திருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் நிற்கிற இருவரும் தமிழின அழிப்பு யுத்தத்தின் குற்றவாளிகள். அதை தேர்தல் காலமான இந்நாட்களில் அவர்களாகவே மாறிமாறி பகிரங்கப்படுத்துகிறார்கள்.

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களை படுகொலை செய்வதற்கு கோத்தபாயராஜபக்ஷவே இராணுவ அதிகாரிகளுக்கு கட்டளையிட்டதாக சரத்பொன்சேகா கூறியிருக்கிறார். தான் இந்த குற்றத்தில் தொடர்புபடவில்லை என்று பொன்சேகா சொல்லுகிறார். ஆனால் மகிந்த சகோதரர்களும் சரத்தும் இணைந்து மேற்கொண்ட யுத்தக்குற்றம்தான் என்பது அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய உன்மை. படையினரிடம் வந்து சரணடைய மக்கள்மீது கடுமையான தாக்குதலை நடத்தும்படி கட்டளை பிறப்பித்தவர்கள் அதை மிகவும் கேவலமாக நடத்தியவர்கள் பின்னர் சரணடைந்த புலிகளையும் அழித்து ஒழித்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து ஈழத் தமமிழ் மக்களின் முப்பதுவருடகாலப் போராட்டத்தை சிதைக்க சிங்கள அரசும் இராணுவமும் எதையும் செய்துவிடத் தயாராக இருந்தது. தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்ப் பின்னர் முன்றாம் தரப்புடன் பேசி புலிகள் சரணடைந்தபோது அவர்கள் சுட்டும் உயிருடன் சித்திரவதை செய்தும் கொல்லபபட்டார்கள். அரசாங்கததின் ஆதரவு இணையதளங்கள் தலைவர் பிரபாகரன், தளபதி சூசை, தளபதி பானு, தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், மகள் துவாரகா, அரசியல்தலைவர் நடேசன், சமாதானப் பணிப்பாளர் புலித்தேவன் முதலியவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்டதற்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ளன.
இப்படி எல்லாவற்றையும் அழித்து அடக்கி ஆட்சிசெய்து ஈழ மக்களின் போராட்டத்தை அடியுடன் அழித்துவிட்டு தேர்தலைக்கொண்டு வந்தார் இலங்கை ஜனாதிபதி. இந்தத் தேர்தலில் தன்னை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டாலும் சிங்கள மக்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என்று மகிந்த நம்பியிருந்தார். சிங்கள மக்கள் யுத்த வெற்றியை அந்தளவுக்கு கொண்டாடியிருந்தார்கள்.

அந்த நம்பிக்கையில்தான் மகிந்த தனது ஆட்சி முடிவடைவதற்கு இரண்டு வருடகாலம் இருப்பதற்கு முன்பாகவே தேர்தலை நடத்த தீர்மானித்தார். யுத்த வெற்றியின் ருசி ஆறுவதற்கு முன்பாக மக்களின் வாக்குகளைப் பெற்று மீளவும் பதவியைப் பிடித்துவிடவேணடும் என்ற மகிந்தவின் கணக்கு பிழைத்துவிட்டது.
யுத்த வெற்றியில் சரத்பொன்சேகாவுக்கும் மகிந்தவுக்கும் இடையில் இப்பொழுது யுத்தம் நடக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு யுத்த வெற்றயில் உரிமை கிடையாது என்றும் தானே யுத்தத்தை வழி நடத்தியவன் யுத்த வெற்றி எனக்கே உரியது என்றும் சரத்போன்சேகா சொல்லிக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் இறங்கியிருக்கிறார். இதை மறுத்து ஜனாதிபதியும் அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷவும் சரத்பொன்சேகா ஒரு இராணுவ அதிகாரி தாங்கள் கட்ளையிடுவதைச் செய்பவர் என்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். யுத்தத்திற்கு நானே பொறுப்பு நானே வழி நடத்தியவன் இராணுவம் பெற்ற வெற்றியை நிரந்தரமா பாதுகாப்பதற்காகவே தான் ஜனாதிபதியாகப்போவதாக சரத் பொன்சேகா இறங்கியருக்கிறார்.

ஈழத்திமிழர்களை வந்தேறுகுடிகள் என்றும் அவர்களுக்கு இந்த நாட்டில் உரிமை எதுவும் கிடையாது என்றும் கூறியவர் சரத்பொன்சேகா. இதுவரையில் ஈழ மக்களை கடுமையான இனவாதப்போக்கில் அபடிப்டையில் பார்த்தே அவர் அழித்துவந்திருக்கிறாh. எல்லாத் தமிழர்களும் பயங்கரவாதிகள் இல்லை ஆனால் தமிழர்களில் அதிகமானவர்கள் பயங்கரவாதிகள் என்றும் அவர்களை அழிப்பது தவறில்லை என்று அதை நிகழ்த்தியிருப்பவர். முதலாவது மனிதாபிமான நடவடிக்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாக கூறுகிற சரத்பொன்சேகா இரண்டாவது மனிதாபிமான நடவடிக்கையை ஜனாதிபதித் தேர்தலில் தொடங்கியருப்பதாக கூறுகிறார்.

ஜனாதிபதி வேட்பாளரான சரத்பொன்சேகதவை ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சிகளுடன் மற்றும் சில கட்சிகள் இணைந்து தேர்தலில் இறக்கியுள்ளார்கள். ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெல்ல முடியாது என்பதை புரிந்து சரத்தை இருத்தியிருக்கிறார். சரத் ஜனாதிபதியாகினால் தான் பிரதமராகலாம் என்று ரணில் எதிர்பார்க்கிறார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே இந்தக் கட்சிகள் ஒன்றினைந்து சரத்தை நிறுத்தியிருக்கிறார்கள். தனியொருவரிடம் உள்ள நிறைவேற்றுகிற அதிகாரத்தை பறிப்பதற்காகவே தாங்கள் இணைந்திருப்பதாக கூறி இன்னnhருவர் அதிகாரத்தை எடுக்கப்பார்க்கிறார். இங்கு மகிந்தராஜபக்ஷ கடந்தகாலங்களில் நடந்து கொண்டதுபோலவே சரத்பொன்சேகா மற்றும் ரணில்விக்கிரமங்க அதிகாரத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள். இது சாமானிய தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களுக்கு எதிரானது. உழைக்கும் மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கிற தந்திரத்தைக் கொண்டிருக்கிறது.

இரண்டு பேய்களும் யுத்த வெற்றிக்காகவும் ஏக அதிகாரப்போட்டிக்காகவும் அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்கள் இடையில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் வீடுகளுக்கு திரும்பாமல் பல ஆயிரக்கணக்கான மககள் காத்திருக்கிறார்கள். தப்புமுகாங்களில் வைத்து காணமால்போனவர்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. புனர்வாழ்வு முகாங்களில் முன்னாள் போராளிகள் என்று ஒரு யுத்தத்தில் பலவந்தமாக சேர்க்கப்பட்டவர்களும் நீண்ட காலச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அரசியல்தீர்வு இனித் தேவையற்றது என்று அது பற்றி இதுவரையில் பேசாமல் இருந்தது அரசாங்கம். எல்லாவற்றையும் இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாகவும் கைதிகளாகவும் உரிமையற்று நிர்க்கதிநிலையில் இருக்கிறார்கள் ஈழ மக்கள்.

இந்த தேரத்தில் தமிழ் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து நல்ல பெயரைப் பற்றுக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை பெற மகிந்தராஜபக்ஷ திட்டமிட்டிருக்கிறார். முழு மக்களும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. வன்னியின் மேற்கில் சில பகுதிகளுக்கு மக்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அறிவிப்பு செய்தபடியும் புகைப்படங்களைப் பிடித்தபடியும் மகிந்த சிந்தனையைப் விவரித்துக்கொண்டும் மகிந்த அரசாங்கம் மக்களை விடுதலை செய்து கொண்டிருக்கிறது.

மகிந்தவின் வாக்குறுதிகளையும் பொன்சேகாவின் வாக்குறுதிகளையும் நம்பித் தமிழ்க்கட்சிகள் பிளவுண்டு இரண்டு பக்கங்களாக நிற்கின்றன. ஈழத்தமிழ் மக்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதற்கு வாய்ப்பிருப்பதுபோலவும் இருக்கிறது. ஆனால் தேர்தலை புறக்கணிப்பதன் வாயிலாக ஒன்றையும் சாதித்துவிட முடியாது. சிங்கள மக்கள் தங்கள் ஜனாதிபதியை தெரிவு செய்வார்கள். ஆனால் தமிழ் மக்கள் யாரை தெரிவு செய்வது? தமிழ் வேட்பாளர்கள் யாராவது தேர்தலில் நிற்பதை மக்கள் விரும்புகிறார்கள். சனத்தொகை மற்றும் இன விகிதத்தின்படி அப்படி நின்றாலும் வென்றுவிட முடியாது. இப்படியான இரண்டு பேய்களின் மத்தியில் எதற்கு வாக்களிப்பது என்பது தமிழ் மக்களுக்கு மிகுந்த சிக்கலானதாக இருக்கிறது.


நன்றி: வடக்குவாசல் ஜனவரி 2010  http://www.vadakkuvaasal.com/