நாகர்கோவில்.
அன்புள்ள கண்ணன்.
புத்தகம் அங்கு வெளிவருகின்ற சம நேரத்தில் இங்கு அந்த விழாவை நினைத்துப் பார்க்க மட்டும்தான் என்னால் முடிகிறது. கலந்து கொள்ளுவதற்கான பெரும் ஆசையிருந்தாலும் எந்த பாதைகளுமற்று இருக்கிற இனம் என்ற வகையில் ஒடுங்கியிருந்து துன்பமைடயத்தான் முடிகிறது. எல்லா பக்கங்களாலும் சுருங்கி பற்கள் தின்பற்கான தருவாயில் நிற்கிற வாழ்வில் கொடுமையான அனுபவங்களும் துயரங்களையும் தவிர இங்கு நம்மிடம் எதுவுமில்லை.
காலச்சுவடு எனது புத்தகத்தை வெளியிடுவதில் பெரும் ஆறுதல் கொள்ளுகிறேன். வாழ்வனுபவத்தின் வழியாக கிடைத்த இந்த படைப்பனுவம் இன்னும் நீளுகிற இந்த வாழ்வுக்கும் எனது மக்களுக்குமுரியது. மிகவும் மோசமான நெருக்கடிகள் இங்கு வந்துவிட்டன. எல்லா வழிகளும் அடைபட்டு விட்டன. தோல்வியையும் துன்பங்களையும் உலகம் திரண்டு நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.
நாளுக்கொரு கிராமங்கள் வீழ்ந்து முடிகிறது போய் மணிக்கொரு கிராமம் என்று வீழ்கிறது. சனங்கள் பெயர்வதற்கு இடமற்று இருக்கிறார்கள். போர்களங்களை தாண்டியும் தமிழர் மண்மீது போருக்கான ஆபத்துக்கள் நெருக்கடிகள் சூழ்கின்றன. தமிழர்கள் அவலப்பட்டுத்தரிய சிங்களவர்கள் வெற்றிகளை கொண்டாடுகிறார்கள்.
ஆக இரண்டு இனத்திற்கிடையலான போர் என்று வெளியப்படையாக தெரிகிற அளவில் நிலமை இருக்கிறது. தோல்வியிலிருந்து மீள மீள போர் நடக்கத்தானே செய்யும். இன அழிப்புக்கான போர் ஒன்றியிலிருந்து இனம் அல்லது வாழ்வை காத்துக்கொள்ள நமக்கிருக்கிற வழி ஒன்றுதான் மரணத்தின் வாசல் என்பது மிகவும் துன்பமான செய்தியாகும்.
ஊமைகளாக அல்லது அடிமைகளாக வாழ முடியாத நிர்பந்தம். சனங்களின் சிலரது சுயநலங்களினாலும் சில போராளிகளது மீறல்களாலும் போராட்டத்தை ஒதுக்கி சிங்கள பெரும் தேசியத்துள் நசிய முடியாது என்ற தெளிவும் உறுதியும் எனக்கிருக்கிறது. தவிர்க்கப்பட வேண்டியவற்றை விமர்சனத்துக்குள்ளாக்கி அதை செப்பனிடுவது தான் இனம் குறித்தும் சுய உரிமையுள்ள வாழ்வு குறித்தும் செய்கிற பங்களிப்பாக இருக்கிறது.
புத்தகம் வெளியிடுகின்ற பொருளாதார வசதியும் எனக்கு இங்கு இல்லாமலிருந்தது. வெளியிடுவதன் மூலம் உயிருக்கான ஆபத்தையும் தேடுவதாக இருந்தது. அடையாளம் காட்ட முடியாத சூழ்நிலையில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்படியான தருவாயில் எனது புத்தகத்தை வெளியிட காலச்சுவடு முன்வந்தது மிகவும் பெரிய உதவியாகும்.
காலச்சுவடு பதிப்பகத்திற்கு எனது மிகவும் அன்பான நன்றிகள். இந்த புத்தகத்தை வெளியிடுகிற திரு கண்ணன் அவர்களுக்கும், இதற்கான வேலைகளை செய்துதவிய ராஜமார்த்தாண்டனுக்கும், வெளியிடுகிற சுகுமாரனுக்கும் எனது அன்பான நன்றிகள். அக்கறையுடன் உதவிய மாதுமைக்கும் எனது அன்பான நன்றிகள் மற்றும் எனக்கு வாழ்வில் கருத்துக்களையும் அன்பையும் ஆறுதலையும் கூறிவருகிற எல்லா நண்பர்களுக்கும் எனது அன்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
தீபச்செல்வன்
கிளிநொச்சி.
11.01.2009
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக