தீபச்செல்வன்
இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர்கள் யுத்தத்தால் பட்ட காயங்கள் ஆறுவதற்கு முன்பே தற்போதைய ஜனாதிபதி மகி;தாராஜபக்ஷே ஜனாதிபதித் தேர்தலை அறிவித்திருக்கிறார். இன்று முகாங்களிற்குளிருந்து அகதிகள் எண்ணி எண்ணி விட்படுகிறார்கள். தங்கள் சொந்த நிலங்களில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள்மீது யுத்தம் நடத்தி, பலவந்தமாக தடுப்புமுகாங்களுக்குள் அடைத்து வைத்துவிட்டு அவர்களை அரசாங்கம் விடுவித்துக்கொண்டிருக்கிறது. இறுதி யுத்தமும் தடுப்பு முகாங்களும் இந்த்தேர்தலும் பல விடயங்களை வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவும் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பென்சேகாவும் ஈழத் தமிழர்களின் வாக்குகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதைப்போல’ யுத்தத்தால் பாதிக்கப்ட்ட ஈழ மக்களின் வாழ்வில் இந்த அரசியல் ஏகபோக அதிகாரப் போட்டி பெரும் துன்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
மகிந்தராஷபக்ஷக்கு முற்றிலும் அவர் எதிர்பார்த்திராத நெருக்கடிநிலையொன்று தோன்றியிருக்கிறது. ஈழத்தமிழ் மக்களை வகைதொகையற்று அழித்து யுத்த வெற்றியைப் புசித்து தன் புன்னகையை நாடெங்கும் சுவரொட்டிகளால் ஒட்டி கொண்டாடிக் கொண்டிருந்தவர் இப்படியொரு நெருக்கடி வருமென்று நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். ஈழத் தமிழ் மக்களை முகாங்களில் வைத்துக்கொண்டு அவர்களை வெளியில் விடாதும் உறவினர்களை சந்திக்க கடுமையான விதிகளை போட்டுக்கொண்டும் வன்னிப் பெருநிலத்தின் அடையாளங்களை முழுமையாக அழிக்கும்பொழுதும் இந்த நாட்டின் நிரந்தர ராஜா தான் என்றே நினைத்துக் கொண்டிருந்தார். சிலவேளை வருகிறதேர்தலிலும் மகிந்தவே வென்று ஜனாதிபதியாகலாம். ஆனால் இந்த நாட்கள் அவரை கடுமையாக வருத்திக்கொண்டிருக்கிறது.
தேர்தலில் இருவரும் வாக்குறுதிகளை வழங்கத் தொடங்கியுள்ளார்கள். நிறைவேற்று ஜனாதிபதி உரிமையை இல்லாமல் செயது தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை தரப்போவதாக பொன்சேகாவும், ஜனாதிபதித்தேர்தலின் பின் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்று மகிந்தராஜபக்ஷவும் சொல்லுகிறார்கள். இலங்கைத் தீவில் காலம் காலமாக தமிழ் மக்கள் ஏமாறறப்பட்டுக்கொண்டு வருகிற சூழலில் ஈழமக்கள் எதையும் நம்ப முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள். ஈழ மக்களுக்கு ஒரு மிகுந்த சங்கடமான தேர்தலாக இந்தத் தேர்தலும் வந்திருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் நிற்கிற இருவரும் தமிழின அழிப்பு யுத்தத்தின் குற்றவாளிகள். அதை தேர்தல் காலமான இந்நாட்களில் அவர்களாகவே மாறிமாறி பகிரங்கப்படுத்துகிறார்கள்.
சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களை படுகொலை செய்வதற்கு கோத்தபாயராஜபக்ஷவே இராணுவ அதிகாரிகளுக்கு கட்டளையிட்டதாக சரத்பொன்சேகா கூறியிருக்கிறார். தான் இந்த குற்றத்தில் தொடர்புபடவில்லை என்று பொன்சேகா சொல்லுகிறார். ஆனால் மகிந்த சகோதரர்களும் சரத்தும் இணைந்து மேற்கொண்ட யுத்தக்குற்றம்தான் என்பது அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய உன்மை. படையினரிடம் வந்து சரணடைய மக்கள்மீது கடுமையான தாக்குதலை நடத்தும்படி கட்டளை பிறப்பித்தவர்கள் அதை மிகவும் கேவலமாக நடத்தியவர்கள் பின்னர் சரணடைந்த புலிகளையும் அழித்து ஒழித்தார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து ஈழத் தமமிழ் மக்களின் முப்பதுவருடகாலப் போராட்டத்தை சிதைக்க சிங்கள அரசும் இராணுவமும் எதையும் செய்துவிடத் தயாராக இருந்தது. தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்ப் பின்னர் முன்றாம் தரப்புடன் பேசி புலிகள் சரணடைந்தபோது அவர்கள் சுட்டும் உயிருடன் சித்திரவதை செய்தும் கொல்லபபட்டார்கள். அரசாங்கததின் ஆதரவு இணையதளங்கள் தலைவர் பிரபாகரன், தளபதி சூசை, தளபதி பானு, தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், மகள் துவாரகா, அரசியல்தலைவர் நடேசன், சமாதானப் பணிப்பாளர் புலித்தேவன் முதலியவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்டதற்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ளன.
இப்படி எல்லாவற்றையும் அழித்து அடக்கி ஆட்சிசெய்து ஈழ மக்களின் போராட்டத்தை அடியுடன் அழித்துவிட்டு தேர்தலைக்கொண்டு வந்தார் இலங்கை ஜனாதிபதி. இந்தத் தேர்தலில் தன்னை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டாலும் சிங்கள மக்கள் தனக்கே வாக்களிப்பார்கள் என்று மகிந்த நம்பியிருந்தார். சிங்கள மக்கள் யுத்த வெற்றியை அந்தளவுக்கு கொண்டாடியிருந்தார்கள்.
அந்த நம்பிக்கையில்தான் மகிந்த தனது ஆட்சி முடிவடைவதற்கு இரண்டு வருடகாலம் இருப்பதற்கு முன்பாகவே தேர்தலை நடத்த தீர்மானித்தார். யுத்த வெற்றியின் ருசி ஆறுவதற்கு முன்பாக மக்களின் வாக்குகளைப் பெற்று மீளவும் பதவியைப் பிடித்துவிடவேணடும் என்ற மகிந்தவின் கணக்கு பிழைத்துவிட்டது.

யுத்த வெற்றியில் சரத்பொன்சேகாவுக்கும் மகிந்தவுக்கும் இடையில் இப்பொழுது யுத்தம் நடக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு யுத்த வெற்றயில் உரிமை கிடையாது என்றும் தானே யுத்தத்தை வழி நடத்தியவன் யுத்த வெற்றி எனக்கே உரியது என்றும் சரத்போன்சேகா சொல்லிக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் இறங்கியிருக்கிறார். இதை மறுத்து ஜனாதிபதியும் அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷவும் சரத்பொன்சேகா ஒரு இராணுவ அதிகாரி தாங்கள் கட்ளையிடுவதைச் செய்பவர் என்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். யுத்தத்திற்கு நானே பொறுப்பு நானே வழி நடத்தியவன் இராணுவம் பெற்ற வெற்றியை நிரந்தரமா பாதுகாப்பதற்காகவே தான் ஜனாதிபதியாகப்போவதாக சரத் பொன்சேகா இறங்கியருக்கிறார்.
ஈழத்திமிழர்களை வந்தேறுகுடிகள் என்றும் அவர்களுக்கு இந்த நாட்டில் உரிமை எதுவும் கிடையாது என்றும் கூறியவர் சரத்பொன்சேகா. இதுவரையில் ஈழ மக்களை கடுமையான இனவாதப்போக்கில் அபடிப்டையில் பார்த்தே அவர் அழித்துவந்திருக்கிறாh. எல்லாத் தமிழர்களும் பயங்கரவாதிகள் இல்லை ஆனால் தமிழர்களில் அதிகமானவர்கள் பயங்கரவாதிகள் என்றும் அவர்களை அழிப்பது தவறில்லை என்று அதை நிகழ்த்தியிருப்பவர். முதலாவது மனிதாபிமான நடவடிக்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாக கூறுகிற சரத்பொன்சேகா இரண்டாவது மனிதாபிமான நடவடிக்கையை ஜனாதிபதித் தேர்தலில் தொடங்கியருப்பதாக கூறுகிறார்.
ஜனாதிபதி வேட்பாளரான சரத்பொன்சேகதவை ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சிகளுடன் மற்றும் சில கட்சிகள் இணைந்து தேர்தலில் இறக்கியுள்ளார்கள். ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெல்ல முடியாது என்பதை புரிந்து சரத்தை இருத்தியிருக்கிறார். சரத் ஜனாதிபதியாகினால் தான் பிரதமராகலாம் என்று ரணில் எதிர்பார்க்கிறார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே இந்தக் கட்சிகள் ஒன்றினைந்து சரத்தை நிறுத்தியிருக்கிறார்கள். தனியொருவரிடம் உள்ள நிறைவேற்றுகிற அதிகாரத்தை பறிப்பதற்காகவே தாங்கள் இணைந்திருப்பதாக கூறி இன்னnhருவர் அதிகாரத்தை எடுக்கப்பார்க்கிறார். இங்கு மகிந்தராஜபக்ஷ கடந்தகாலங்களில் நடந்து கொண்டதுபோலவே சரத்பொன்சேகா மற்றும் ரணில்விக்கிரமங்க அதிகாரத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள். இது சாமானிய தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களுக்கு எதிரானது. உழைக்கும் மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கிற தந்திரத்தைக் கொண்டிருக்கிறது.
இரண்டு பேய்களும் யுத்த வெற்றிக்காகவும் ஏக அதிகாரப்போட்டிக்காகவும் அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்கள் இடையில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் வீடுகளுக்கு திரும்பாமல் பல ஆயிரக்கணக்கான மககள் காத்திருக்கிறார்கள். தப்புமுகாங்களில் வைத்து காணமால்போனவர்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. புனர்வாழ்வு முகாங்களில் முன்னாள் போராளிகள் என்று ஒரு யுத்தத்தில் பலவந்தமாக சேர்க்கப்பட்டவர்களும் நீண்ட காலச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அரசியல்தீர்வு இனித் தேவையற்றது என்று அது பற்றி இதுவரையில் பேசாமல் இருந்தது அரசாங்கம். எல்லாவற்றையும் இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாகவும் கைதிகளாகவும் உரிமையற்று நிர்க்கதிநிலையில் இருக்கிறார்கள் ஈழ மக்கள்.
இந்த தேரத்தில் தமிழ் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து நல்ல பெயரைப் பற்றுக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை பெற மகிந்தராஜபக்ஷ திட்டமிட்டிருக்கிறார். முழு மக்களும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. வன்னியின் மேற்கில் சில பகுதிகளுக்கு மக்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அறிவிப்பு செய்தபடியும் புகைப்படங்களைப் பிடித்தபடியும் மகிந்த சிந்தனையைப் விவரித்துக்கொண்டும் மகிந்த அரசாங்கம் மக்களை விடுதலை செய்து கொண்டிருக்கிறது.
மகிந்தவின் வாக்குறுதிகளையும் பொன்சேகாவின் வாக்குறுதிகளையும் நம்பித் தமிழ்க்கட்சிகள் பிளவுண்டு இரண்டு பக்கங்களாக நிற்கின்றன. ஈழத்தமிழ் மக்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதற்கு வாய்ப்பிருப்பதுபோலவும் இருக்கிறது. ஆனால் தேர்தலை புறக்கணிப்பதன் வாயிலாக ஒன்றையும் சாதித்துவிட முடியாது. சிங்கள மக்கள் தங்கள் ஜனாதிபதியை தெரிவு செய்வார்கள். ஆனால் தமிழ் மக்கள் யாரை தெரிவு செய்வது? தமிழ் வேட்பாளர்கள் யாராவது தேர்தலில் நிற்பதை மக்கள் விரும்புகிறார்கள். சனத்தொகை மற்றும் இன விகிதத்தின்படி அப்படி நின்றாலும் வென்றுவிட முடியாது. இப்படியான இரண்டு பேய்களின் மத்தியில் எதற்கு வாக்களிப்பது என்பது தமிழ் மக்களுக்கு மிகுந்த சிக்கலானதாக இருக்கிறது.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக