புதன், 20 ஜனவரி, 2010
‘குழந்தைகள் அழுதுகொண்டேயிருக்கிறார்கள்’ - கவிதைக்கு தமிழ்மணம் விருது
விருதுகள் மற்றும் போட்டிகளில் பங்கு கொள்வது எனக்கு அவ்வளவு விருப்பமாய் இருப்பதில்லை. தமிழ்மணம் விருது 2009 க்கான பேட்டி அறிவிப்புகள் தமிழ்மணத்தால் மின்னஞ்சல் செய்யப்பட்டிருந்தது. அந்த மின்னஞ்சல் காரணமாகவே அந்தப் போட்டியில் நுழைந்திருந்தேன். படைப்பிலக்கிய பிரிவில் ‘குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கிறார்கள் ’ – கவிதை முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த கவிதை வெற்றி பெற வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் இந்த போட்டியை நடத்திய தமிழ்மணம் தளத்திற்கும் முதலில் என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
இந்தக் கவிதைக்கு விருதுகிடைத்த பொழுது இந்தக் கவிதை எழுதிய சூழ்நிலையும் சம்பவமும்தான் எனக்கு முன்னால் வந்து நிற்கிறது. பல்கலைக்கழகத்திற்கு தடுப்பு முகாம்களிலிருந்து மாணவர்களைக்கொண்டு வந்து இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். இந்தக் கவிதை எழுதிய (செம்டம்பர் 03 2009) நாட்களில் தடுப்புமுகாம்களிலிருந்து மாணவர்களை எடுப்பது மிகுந்த சிரமாக இருந்தது. அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாகவே மாணவர்களை விடுவித்துக்கொண்டிருந்தது. எங்கள் பல்கலைக்கழக துணைவேந்தரும் நானும் (செயலாளர் - பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்) பிரசன்னாவும் (தலைவர் - பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்) அமைச்சர்களிடமும் அரச அதிபரிடமும் இறுதியில் ஜனாதிபதியிடமும் பசில்ராஜபக்ஷவிடமும் சென்று இவர்களை விடுவிக்க கோரிக்கொண்டிருந்தோம். மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக 9 பேர், 10 பேர் முதல் 90 பேர், 50 பேர் என விடுவிக்கப்பட்டார்கள்.
வன்னியில் நடந்த பலவந்தமான ஆட்சேட்பிலிருந்து தப்பித்துக்கொள்ளுவதற்காக பல்கலைக்கழக மாணவர்களில் அநேகமானவர்கள் திருமணம் முடித்திருந்தார்கள். அதனால் கைகளில் குழந்தைகளுடன் வந்தார்கள். சிலர் தங்கள் கணவன்மார்களை போர்க்களத்திலும் வழியிலும் பலிகொடுத்திருந்தார்கள். சில மாணவிகளின் கணவர்மார் போராளிகளுக்கான தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். முகம் கொள்ள முடியாத வலியையும் கதைகளையும் கொண்டு இந்த மாணவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். கணவன் ஒரு பேருந்திலும் மனைவி ஒரு பேருந்திலும் கணவன் விடுவிக்கப்பட்டு மனைவி விடுவிக்கப்படாமலும் மனைவி விடுவிக்கப்பட்டு கணவன் விடுவிக்கப்படாமலும் என்று பிரிவுகளுக்கும் வலிகளுக்கும் ஆளாகிக்கொண்டிருந்தார்கள்.
மாணவர்கள் நாளுக்கு நாள் விடுவிக்கப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் அந்தப் பணிகளில்ல நாங்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுது கஜீபனா என்ற மாணவி என்னிடத்தில் வந்து தான் தன் குழந்தையை தடுப்புமுகாமில் கணவருடன் விட்டு வந்திருப்பதாகவும் குழந்தை தன்னைப் பிரிந்து நோய்வாய்ப்பட்டு அழுது அழுது தொண்டை காய்ந்து விட்டது என்றும் தன் குழந்தையை தன்னிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டார். கஜீபனா துக்கத்தில் உறைந்துபோயிருந்தார். அவரும் குழந்தையைப்போல அழுது தொன்டை காய்ந்து சொற்களற்றிருந்தார். துணைவேந்தருக்கு அறிவித்து இதற்கு நடவடிக்கை எடுக்க தொடங்கினாலும் அன்றைய சூழ்நிலையில் மிகுந்த சிரமமானதாக இருந்தது.
யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவதாக இருந்தால் இராணுவத்தினரின் பயண அனுமதி தேவை. தடுப்பு முகாமில் இருந்து வந்த மாணவி ஏன் உடனே அங்கு திரும்பிச் செல்லுகிறார் என்ற கேள்வியை கட்டாயம் இராணுவம் கேட்க வாய்ப்pருந்தது. இது ஒட்டுமொத்த வன்னி அகதி மாணவர்களை பாதிக்கலாம். இருந்தும் அரச அதிபர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு ஊடாக பசில்ராஜபக்ஷவுக்கு அறிவித்து கோரிக்கை விடுத்திருந்தோம். சில நாட்களாக மீண்டும் மீண்டும் கண்ணீரும் இறுகிய முகமுமாக கஜீபனா வந்து சென்ற பொழுதே இந்தக் கவிதையை எழுதியிருந்தேன். நீண்ட நாட்களின் பின்னர் குழந்தையும் கணவரும் கஜீபனாவுடன் சேர்க்கப்பட்டது.
குழந்தையை பிரிந்து கழித்த அவரது துயர் மிகுந்த நாட்களுக்கு பிரிய நேர்ந்த அவரது தாய்மைக்கு எமது மக்களை நிர்பந்தித்த அந்த சூழ்நிலைக்கு இந்த கவிதை சமர்ப்பணமாக எழுதப்பட்டிருந்தது. இந்த விருது என்பது கஜீபனாவின் துயர்மிகுந்த நாட்களை மீட்டிப் பார்ப்பதற்கும் அவர் தன குழந்தையை அடைந்த மகிழ்ச்சியைப் பறிமாறிக்கொள்வதற்கும் அணைத்து பதிவர்களையும் இந்தக் கவிதையுடன் இணைத்திருக்கிறது.
தீபச்செல்வன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

வாழ்த்துகள். கவிதைக்கான கரு எடுக்கப்பட்ட இடம் மனம் வலிக்கச் செய்கிறது.
பதிலளிநீக்குவாழத்துக்கள் தீபச்செல்வன், வலிகளை உணர்த்தும் வரிகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள். எங்கள் கவிதைகள் கவனிக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு உங்களுக்குக் கிடைத்த விருது ஆதாரமாக உள்ளது.
பதிலளிநீக்குஉங்கள் பதிவுகள் தொடரட்டும்
நட்புடன்
துவாரகன்