ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

சூழ்ச்சிகளுடன் வரும் தேர்தல் – என்ன செய்யப் போகிறோம் : தீபச்செல்வன்



நாங்கள் சிக்கி முக்கி தவிக்கும் ஒரு யுத்தத்தின் தொடர்ச்சியாகத்தான் நமக்கு முன்னால் வரும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கைகளும் நடக்கின்றன. எதையும் மீட்டிப் பார்க்க முடியாத சுதாகரிக்க முடியாத யுத்தம். தமிழ் அரசியல் தலமைகள் என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பத்தை ஏற்படுத்திய சூழல். ஈழப் போராட்டத்தை எப்படி அடுத்த கட்டம் முன்னெடுக்கப் போகிறோம்? அதற்கான அடுத்த கட்டப் பணிகளை முன்னெடுக்கும் நேர்மையானவர்கள் யார்? ஏன்ற கேள்விகள் எமக்கு முன்னால் விளைந்திருந்தன. ஈழத் தமிழ் இனத்தை அதன் காலத்தை அதன் வாழ்வை முழுக்க முழுக்க கேள்விக்குள்ளாக்கிய பேரினவாத அரச யுத்தம் மற்றும் அதனுடைய நோக்கம் என்பன யுத்தத்தின் பின்னரும் தன் அழிப்பு நடவடிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. ஈழ மக்களின் அடுத்த கட்டத்தை நகர்த்தும் பணி எனபது வெறுமனே கட்சி அரசியல் சார்ந்த நடவடிக்கை அல்ல. அது ஒரு போராட்டமாகவே தொடருகின்றது.

இப்பொழுது நமக்கு முன்னால் உள்ள பாரிய சவால்களும் சூழ்ச்சிகளும் நிறைந்த பாராளமன்றத் தேர்தலை இந்த அடிப்படையில்தான் கையாள வேண்டும். அறுபது வருடகால போராட்ட வாழ்வில் முப்பது வருடகால ஆயுதப் பேராட்ட அனுபவத்தில் எமக்கு இந்த மனநிலை வராது, மீளவும் எமக்குள் பிளவுகளும் கரிபூசல்களும், தவறான கையாளுகைகளும் ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கின்ற விடயங்களாக இருக்கின்றன. எமக்குள் முன்பு ஏற்பட்ட அதே பிளவுகள் இன்று இன்னும் ஏற்படுகின்றன. அதே பிளவுகள் இன்னும் தொடருகின்றன. எல்லாவற்றுக்குமான விலையையும் எமது மக்கள் தங்கள் வாழ்விலிருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்து தமிழ் மக்களின் கனவு பலியாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ் அரசியல் தரப்புக்கள் எல்லாமே அரசாங்கத்திற்கு ஒரே பார்வையில்தான் தெரிகின்றன. நாங்கள் அணிந்திருக்கும் ஆடைகள் வெவ்வேறாக தெரியலாம். வரும் வழிகள் வெவ்வேறாக தெரியாமல். ஆனால் அரசு எந்த வழியால் வந்தாலும் சிதைப்பதற்கான பொறிகளை வழிகளில் நிரப்பி வைத்திருக்கிறது. இந்தப் பொறிகளை அடையாளம் கண்டு பயணம் செய்ய வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. இந்தப் பொறிகள் நமது வழியை பல வகையில் சிதைக்கின்றன. இங்கு தான் நாம் பெரிய தவறுகளை இழைக்கிறோம். மக்களின் எதிர்பார்ப்புகளில் இருந்துதான் மக்களின் கனவுகளில் இருந்தூன் அரசியலை அதன் சித்தாந்தத்தை வழிகளை தொடங்க வேண்டும். போராடும் மக்களுக்கு உரிய அரசியல் இந்த வகையில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால் முழுக்க முழுக்க சுயநலன்களும் அதிகாரங்களின் நிகழ்ச்சிகளையும் நிறைவேற்றும் அரசியலை எமது மக்களின் இடையில் முன்னெடுக்க முயல்வது தோல்விக்கு முன்னான நடவடிக்கைகளாகும்.

இந்தத் தேர்தல் நமது அறுபது வருடகால போராட்டத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. கடந்த காலங்களில் எமது மக்கள் சிந்திய குருதி, கொடுத்த உயிர்கள், இழந்த வாழ்வு, சொத்துக்கள், தியாகம் செய்த காலம் இவற்றை எல்லாம் தவிடு பொடியாக்கும் நடவடிக்கைகளில்தான் இந்த தேர்தலை நாம் கையாளுகிறோம். இவற்றை நிராகரிக்கிறோம். இவற்றுக்கு மாறாக செயல்படுகிறோம் என்பதுதான் இதன் அர்த்தமாயிருக்கிறது. எமது மக்கள் ஏன் தேர்தல் கூட்டங்களில் பங்குபெற தயங்குகிறார்கள்? வாக்களிக்க தயங்குகிறார்கள்? போராட்ட சூழலில் வாழ்ந்த மக்கள் ஒரு தேர்தலை எதிர் கொள்ளும் பொழுது அது கொண்டிருக்கும் நிலமைகள் அதைச் சுற்றியிருக்கும் சூழ்ச்சிகள் எல்லாம் மக்களது எண்ணங்களுக்கு மாறாக இருப்பதனால்தான். தமிழ் தேசியம், சுயநிர்ணயம், தாயகம் இந்த விடயங்களை தமிழர்கள் என்றும் கைவிட முடியாது. அதைக் கைவிட்டு யாரும் அரசியல் பேச முடியாது. அப்படியொரு நிலையில் அதையே துருப்புச் சீட்டாக வைத்து நமக்குள்ளான உள் முரண்பாடுகள் வளர்ந்திருக்கின்றன. நாங்கள் ஏற்கனவே பிளவுபட்டவற்றை ஒட்ட வைக்க முயற்சிக்கும் பொழுது அதற்காக விரும்பும் பொழுது எமக்குள் புதிய பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தொடக்கம் ஆபத்தானது. சிங்கள பேரினவாதத்தின் புத்திக்கு பல உள் நடவடிக்கைகளை தூண்டத் தக்கது.

மக்கள் கேட்கிறார்கள் ஏன் பிரிந்தார்கள்? ஏன் அவர்களை வெளிறே விட்டார்கள்? மாறி மாறி சேறு பூசுவதுதான் நமக்கு இப்பொழுது தேவையானதா? மிக அருவருப்பு ஊட்டும் பிரசாரங்களை எந்த அர்த்தமுமற்ற வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்ற முனைபவர்கள் தான் இந்தத் தேர்தலில் தமது ஆசனங்களை இலக்காக வைத்திருக்கிறார்கள். தமிழர்களுக்காக தமிழர்களாக வாழுவதுதான் முதலாவது அவர்களது வாக்குறுதிகளது உன்மைதன்மை. சிங்களப் பேரினவாத அரசோ அல்லது அதிகாரத்தையும் தன் பொருளாதார அரசியல் நலன்களையும் கண்ணாகக் கொண்ட சர்வதேசமோ புரிந்து கொள்ளா விட்டாலும் மக்களை புரிந்து கொள்ளுவதுதான் வாக்குறுதிகளின் உன்மைதன்மை. மக்கள்மீது சுயநலன் பொருந்திய அரசியல் வழிமுறைகளை திணிப்பது அல்ல.

முக்கியமான தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் இந்த முரண்பாடுகளும் சேறு பூசல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அரசாங்கத்தால் இறக்கப்பட்ட ஆளும் கட்சியினரும் அரசாங்கத்தால் இறக்கப்பட்ட சுயேட்சை கட்சிகளும் களத்தில் பல நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன. சந்தர்ப்ப வாத தந்திரங்களை கையாள முனைகின்றன. அதற்கு நம்மில் பலர் பலியாகியிருக்கிறார்கள். கடந்த காலங்களில் எமது சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாக முக்கியமானவர்களாக இருந்த பலர் இதில் பலியாகியிருக்கிறார்கள். தமிழ் அரசியல் வலுவை சிறடிக்கும் இந்த வேலைகளில் இறங்கியிருப்பவர்களை மக்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இதில் மக்களும் ஆழமாக புரிந்து செயற்பட வேண்டிய தேவையிருக்கிறது.

எனவே இந்தத் தேர்தல், கட்சிகளுக்கும் மக்களுக்கும் வாக்குகளுக்கும் போராட்டத்திற்கும் இடையிலான தொடர்பை அர்த்தத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தும் வகையில் நமக்கு முன்னால் வந்திருக்கிறது. அறிவுபூர்வமாக தந்திரோபயமாக கீறல் விழாத வகையில் அர்ப்பணிப்புக்களுடன் இதைக் கையாள வேண்யிருக்கிறது. இதுவரை முன்னெடுக்கப்பபட்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக அது நகர வேண்டும என்ற அவசியம் தான் இங்கு முக்கியம் பெறுகிறது.

ஆக இதுவரையான எமது காலத்தையும் போராட்டத்தையும் வாழ்வையும் பேரினவாத அரசின் சூழ்ச்சிகளிடமிருந்து மீட்க வேண்டிய மாபெரும் சவாலுடன், எமது மக்களின் முன்னால் இந்தத் தேர்தல் களம் விரிந்திருக்கிறது.

தீபச்செல்வன்

நன்றி : ஆனந்தி ஏப்பிரல் 2010

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக