சனி, 1 மே, 2010

யும் பாடலும் நிறைந்திருந்த இனிய வாழ்வு இல்லம் இப்பொழுது சிதைந்து போயிருக்கிறது

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்


அந்தப் பிள்ளைகளிடம் இருக்கும் வலிமை எங்களிடம் இருப்பதில்லை. அவர்களிடம் இருக்கும் ஒளி எங்களிடமிருப்பதில்லை. அவர்களிடம் இருக்கும் பாடல் எங்களிடம் இருப்பதில்லை. அவர்களிடம் இருக்கும் மொழி எங்களிடமிருப்பதில்லை. இப்படி எங்கள் தேசத்தின் நம்பிக்கை ஊட்டுகிற இனிய வாழ்வு இல்லத்தின் பிள்ளைகளை அன்று சந்திக்க நேர்ந்தது.

இனியவாழ்வு இல்லத் தலைவர் ராஜ்குமார் புதுவருடத்திற்கு முதல்நாள் மாலை நேரம், பிள்ளைகள் அணியும் புதுவருடத்திற்கான ஆடைகளை வேண்டிக் கொண்டு, கைதடியில் தற்காலிகமாக உள்ள விழி செவிப்புலனற்ற பிள்ளைகளின் இல்லத்தில் தங்கியிருக்கும் தனது பிள்ளைகளுக்கு வழங்குவதற்காக வந்து கொண்டிருந்தார். அந்தப் பிள்ளைகள் மகிழ்வுடன் இருக்க வேண்டும், நாளைய புதுவருடத்தை மகிழச்சியுடன் தொடங்குவதற்காய் கொண்டாட வேண்டும் என்று ராஜ்குமார் செலுத்தும் அன்பும் அக்கறையும் மிகவும் மதிக்கப்பட வேண்டியது.

1997இல் மாசிலாமணி என்ற விழிப்புலனற்றவரால் இந்த இல்லம் தொடங்கப்பட்டது. கிராமசேவையாளராக இருந்த மாசிலாமணி தனது சொந்த முயற்சியால் விழிப்புலனற்று செவிப்புலனற்று ஆதரவற்று அலைந்த குழந்தைகளை தேடி தனது இல்லத்தில் சேர்த்து வந்தார். ஓலைக் கொட்டில் ஒன்றில் எட்டுப் பிள்ளைகளை சேர்த்துக் கொண்டு அந்த இல்லத்தை அவர் தொடங்கினார். நாளடைவில் மாற்று வலுவுள்ள பிள்ளைகள் தங்கள் படிப்பு மற்றும் எதிர் காலம் என்பவற்றை கருதி இனிய வாழ்வு இல்லத்தில் சேர்ந்து கொண்டார்கள். இந்த பிள்ளைகள் எமது சமூகத்தில் தங்களை அடையாளங் காட்டுவது அல்லது அதன் ஓட்டத்தில் எப்படி இணைத்து செல்லுவது என்ற உபாயங்களை அவர்கள் இனிய வாழ்வு இல்லத்தில் பெற்றுக் கொள்ளுகிறார்கள்.



பல்கலைக்கழகத்தில் இந்த இல்லத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்தார்கள். உண்மையில் அவர்கள் நாங்கள் படிக்கும் விடயங்கள் குறித்து எழுப்பும் கேள்வி அது பற்றி கொண்டிருக்கும் எழுச்சிகரமான எதிர்பார்ப்பு என்பன எங்களிடமிருக்கும் சோம்பலைபோல இருப்பதில்லை. அது ஆழமான கேள்விகளை கொண்டது. எப்பொழுதும் விழித்திருக்கும் ஆர்வத்தின் பாற்றப்பட்டது. விரிவுரைகளின் பொழுது நாங்கள் எங்கோ நிற்க அவர்கள் வகுப்பறைக்குள் எப்பொழுதும் நிற்பார்கள். அப்படியான உபாயங்களையும் விழிப்பு நிலைகளையும் அவர்கள் கொண்டிருந்தார்கள். அவர்களின் விசேடமான அளுமையாக அவை இருக்கின்றன.

இனிய வாழ்வு இல்லத்தில் படித்த மாணவர்களில் பலர் 2000 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை எழுதினார்கள். பின்னர் உயர் தரம் படித்த பிள்ளைகளில் யசோதரன், அனுராதா, சிவகுமார், இராஜகுமார் என நான்கு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார்கள். விழிபுலனற்ற இந்த மாணவர்கள் பல்கைலக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தது இனியவாழ்வு இல்லம் கொண்டிருந்த நம்பிக்கையை பகிரங்கமாக வெளிப்படுத்தியது. நம்பிக்கையின் அர்த்தம் வெளித் தெரிந்தது. இதில் சித்தியடைந்த யசோதரன் என்ற விழிப்புலனற்ற சிறுவன் எங்கோ இருக்கிறான் என்பதை அறிந்த மாசிலாமணி பாய்ந்து கொண்டிருக்கும் பாலியாற்றைக் கடந்து சென்று அவனை இல்லத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தார். யசோதரன் போன்ற மாணவர்கள் இப்படி சாதனை செய்திருப்பதை மாசிலாமணி அவர்கள் தாய் தந்தையாக இருந்து அந்த வெற்றியில் ஆறுதல் பெற்றுக் கொண்டிருந்தார். தொடர்ந்து 2003இல் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த ப.இராசகுமார், அ. சந்திரகுமார், ஆ. நகுலேஸ்வரன் முதலானவர்களும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி தற்பொழுது படித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்பொழுது 9 மாணவர்கள் உயர்தரத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இப்படி தனது பயணத்தை வெற்றிகரமாக இனியவாழ்வு இல்லம் நடத்திக் கொண்டிருந்தது. போர் எப்பொழுதும் இரையாக்கிக் கொண்டிருந்த வன்னிப் பெருநிலத்தில் முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் இனியவாழ்வு இல்லம் ஆரம்பித்து இயங்கிக் கொண்டிருந்து. வன்னியில் லட்சக்கணக்கானவர்கள் நிலம் பெயர்ந்து அலையத் தொடங்கிய பொழுது தனது பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு மாசிலாமணி நடக்கத் தொடங்கினார். அப்பொழுது 150 வரையான பிள்ளைகள் இந்த இல்லத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பிள்ளைகள் தங்களிடமிருந்த பொருட்களை எல்லாம் சுமந்து கொண்டு அலையத் தொடங்கினார்கள். சில பிள்ளைகளின் கண்களுக்கு அங்கு நடந்த கொடுமையான சண்டைகள், இரத்தங்கள், சதைகள் தெரியாமலிருந்தன. எதுவும் தெரியாமல் அவற்றின் கொடுமையான ஓசைகளை கேட்டபடி அவர்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். சில பிள்ளைகள் குண்டுகளின் சத்தங்கள், ஷெல்களின் சத்தங்கள், அழுகைகள் என்பனவற்றை கேட்காமல் எந்தச் சத்தமுமில்லாது தங்களுக்கும் முன்னால் நடக்கும் கொடுமைகளை பார்த்தபடி அவற்றுக்கு உள்ளாக்கப்பட்டபடி சென்று கொண்டிருந்தார்கள்.





வழியில் காயங்களுக்கும் மரணங்களுக்கும் முகம் கொடுத்தபடி அவர்கள் செல்லுகிறார்கள். அந்த பிள்ளைகளை காத்து வந்த மாசிலாமணி அவர்கள் ஷெல் தாக்குதலினால் பலி கொள்ளப்படுகிறார். பிள்ளைகள் ஆதரவற்று அனாதைகளாகின்றனர். இறுதியில் சமர் மிகத் தீவிரம் அடையும் பொழுது பெற்றோர்களுடன் பிள்ளைகள் எல்லோரும் சிதறியபடி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்லுகிறார்கள். இப்பொழுது ஏற்கனனே பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மேலும் பாதிப்புக்களுடன் இழப்புக்களுடன் எங்கெங்கோ இருக்கிறார்கள். அவர்களை இணைத்து மீண்டும் இல்லத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ராஜ்குமார் தொடங்கியிருக்கிறார்.

ராஜ்குமார் யாழ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். மாசிலாமணியின் ஆத்மா அமைதியடைய வேண்டும் என்றால் அந்த இல்லத்தை மீள உருவாக்க வேண்டும் விழிபுலனற்ற செவிப்புலனற்ற பிள்ளைகள் படித்து அவர்களின் எதிர் காலம் பயன் பெற வேண்டும். அதற்காக என் வாழ்வை முழுமையாக அர்பணிப்பேன் என்று கூறுகிறார். இனியவாழ்வு இல்லம் என்னை அப்படியான ஒரு மனிதனாகவே வளர்த்திருக்கிறது என்று கூறும் ராஜ்குமாரின் கதையோ மிகுந்த துயரமானது.



ராஜ்குமார் யுத்தத்தினால் தனது பார்வையை இழந்தவர். அம்பலகாமத்திலிருந்து இராணுவம் ஷெல்களை வீசும் பொழுது அந்த ஷெல் வீச்சில் ராஜ்குமாரின் தந்தை பலி கொள்ளப்பட்டார். பின்னர் தாயாரும் நோயாளியாக இறந்து போயிருந்தார். அதன் பிறகு வீட்டுக்கு ஒரே பிள்ளையான ராஜ்குமார் ஆதரவற்ற அனாதைச் சிறுவனாகி விடுகிறார். 5ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டு மாடு மேய்க்கும் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் மாடு மேய்க்கும் பொழுது ஷெல் தாக்குதலில் அவரது இரண்டு கண்களும் காயத்திற்கு உள்ளாகி பார்வை இழந்து போய்விட்டது.

கண்களை இழந்து இனிய வாழ்வு இல்லத்திற்கு வந்து சேரும் ராஜ்குமார் அந்த இல்லம் அவருக்கு கொடுத்த நம்பிக்கை செறிந்த கல்வியால் சாதாரண தரம் உயர்தரம் என்று படித்து சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகினார். இப்பொழுது அதன் இயக்குனராகி சிதைந்த இல்லத்தை மீள ஒருங்கிணைக்கவும் அல்லது சிதறுண்ட பிள்ளைகளை மீள இணைக்கவும் தனது பணிகளை தொடங்கியிருக்கிறார். சில பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் இருக்கிறார்கள். யாரும் இல்லாதவர்களும் இழப்புக்களை சந்தித்தவர்களும் இப்பொழுது கைதடியில் உள்ள இல்லம் ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார்கள். எங்கள் பிள்ளைகள்; உடுப்பதற்கு உடுப்பில்லாமல், உண்பதற்கு உணவு இல்லாமல், இருப்பதற்கு இடமில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று ராஜ்குமார் மிக வேதனையுடன் குறிப்பிடுகிறார்.

அவர்கள் தற்காலிகமாக தங்கியுள்ள அந்த இல்லத்தில் புதிய ஆடைகளை பெறுவதற்காக பிள்ளைகள் எல்லோரும் ஒன்று கூடியிருக்கிறார்கள். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாய்பேசாத பிள்ளைகள் உரையாடும் மொழி மனதை அவர்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தது. அவர்களின் உடையின் அளவு, உடைகளின் விருப்பம் போன்றவற்றுக்கு ஏற்ப அவர்களுக்கான உடைகள் வாங்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு முன்னால் நான் பேசும் பொழுது தைரியத்தை இழந்து போயிருந்தேன். நீங்கள் தைரியமானவர்கள், ஒளி பொருந்தியவர்கள். பாடல் நிறைந்தவர்கள், உங்களிடமிருக்கும் தைரியம், ஒளி, பாடல் என்னிடம் இல்லை என நான் மிக மனம் கலங்கி சில வார்த்தைகளை பகிர்ந்தேன். நான் சொல்லுபவற்றை வாய்பேசாத குழந்தைகளுக்கு பிரமிளா என்ற கண் பார்வை குறைந்த பிள்ளை ஒன்று அவர்களுக்குரிய மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.



அவர்கள் ஒவ்வொருவரும் என்னுடன் உரையாடத் தொடங்கினார்கள். விஜலாதன் என்ற மாணவன் இப்பொழுது சாதாரண தரத்தில் படித்துக் கொண்டிருக்கிறான். அவனின் தந்தை சுதந்திரபுரத்தில் (2009.01.23) இடம்பெற்ற ஷெல்தாக்குதலினால் உயிரிழந்து போனார். அண்ணா பிறப்பிலேயே கால் வலுவற்றவர். தம்பி, அக்கா, இவர்களுடன் அம்மா கொக்குவிலில் தற்காலிக வீடு ஒன்றில் தங்கியிருக்கிறார் என்று அவர் சொல்லுகிறார். விஜயலாதன் மிதிவெடியை எடுத்து விளையாடும் பொழுது அது வெடித்தவேளை தனது கண் பார்வையை இழந்து போயிருக்கிறார். கிளிநொச்சி கனிஷ்ட மகா வி;த்தியாலத்தில் படித்த விஜலாதன் இப்பொழுது குற்றெழுத்து முறையை கற்றுக் கொண்டு படிப்பதாக கூறுகிறார்.

சாதாரண தரம் படிக்கும் இன்னொரு மாணவன் விக்கினேஸ்வரன் ஒன்பது வயதான சிறுவன் ஒருவன் இறுதி யுத்தத்தில் தன்னை மாதிரி கண்களை இழந்து போயிருந்தான் என்றும் அதைப் போல நிறையப் பேர் கண்களை இழந்தவர்கள் இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டான். கண்கள் தெரியாமல் போனதால் அவர்களுடன் நெருக்கமாக பழகியிருப்பதாகவும் இப்பொழுது அவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை ஆனால் அவர்கள் மீள முல்லைத்தீவில் இனியவாழ்வு இல்லம் தொடங்கும் பொழுது அங்கு வருவார்கள் அப்பொழுது சந்திப்பேன் என்று நம்பிக்கையுடன் குறிப்பிடுகிறார்.

விக்கினேஷின் வார்த்தைகள் கடும் நம்பிக்கை கொண்டிருந்தன. அவரின் முகத்தில் ஒளியின் பிரகாசம் தெரிந்தது. கண்கள் இழந்ததைப் பற்றி கவலைப்பட மாட்டேன். அதற்காக தற்கொலை செய்வது எல்லாம் தேவையற்ற செயல். கவலைப் படுவதால் இழந்தது மீளக் கிடைத்து விடுமா? எல்லோரையும் போல என்னால் வாழ முடியும். எல்லோரையும் போல என்னால் முன்னேற முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மற்றவர்கள் வியக்கும் மனிதனாக வேண்டும். மற்றவர்களின் துயரை துடைக்க நான் செற்படுவேன் என்றும் விக்னேஷ் குறிப்பிடுகிறான்.

வினோதினி என்ற விழிபுலனற்ற சகோதரி இனியவாழ்வு இல்லத்தில் மிகவும் சிறந்த பாடகியாக இருந்தார். அவர் இப்பொழுது காலில் காயப்பட்டு கால் அகற்றும் நிலையில் உள்ளார். இப்படி வலிகளின் மீது வலிகளுடன் இனியவாழ்வு இல்லத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அலைகின்றனர்.


நாங்கள் எங்கள் இல்லத்தை திரும்ப எங்கள் சொந்த நிலத்தில் அமைக்க விரும்புகிறோம் என்று இல்லத்தின் இயக்குனர் ராஜ்குமார் சொல்லுகிறார். அதற்காக சொந்த இடத்தில் இல்லத்தை மீள் குடிமயமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ராஜ்குமார் கோரிக்கை விடுக்கிறார். சிதைந்த இல்லத்தை மீளமைத்து இந்த பிள்ளைகளை அங்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். முன்பு தமிழர் புனழ்வாழ்வுக் கழகம், மனிதநேயம், அரச சார்பற்ற நிறுவனங்கள், புலம்பெயர் உறவுகள், புலம்பெயர் நிறுனவங்கள், கிளிநொச்சி அரசாங்க அதிபர் முதலியோர் தமக்கான உதவிகளை வழங்கியதாக குறிப்பிடும் ராஜ்குமார் இப்பொழுது இல்லத்தின் குழந்தைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நிரந்தரமான வழிகளை செய்ய யாராவது முன்வர வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

யுத்தத்தின் பொழுது இரண்டு கஜேஸ் வாகனங்களும் இரண்டு ஆட்டோக்களும் தொலைந்து போய் விட்டன. அங்கு அமைத்த இல்லம் சிதைந்து விட்டது. இப்படி அவற்றை மீளமைத்து எங்கள் பிள்ளைகள் மீள வாழுவதற்காக இவர்கள் அவசியமான உதவிகளை எதிர்பார்க்கிறார்கள். இப்பொழுது எமது பழைய பிள்ளைகளை கொண்டு எங்களைத் தேடி பெற்றோர்கள் வருகிறார்கள். அவர்களுடன் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களும் இந்த இல்லத்திற்கு புதிதாய் இணைகிறார்கள்.

யுத்தமும் காலமும் இவர்களை பிரித்து இவர்களிடமிருந்த வளங்களை அழித்து விட்டது. இனிய வாழ்வு இல்லப் பிள்ளைகளை காயங்களுக்கு உள்ளாக்கி விட்டது. மேலும் அங்கங்களினை பாதித்த பிள்ளைகளை உருவாக்கியிருக்கிறது. அந்தப் பிள்ளைகள் தங்களுக்கான கல்வியைப் பெற்று எதிர்காலத்தை வளம்படுத்த இந்த இல்லம் மீள கட்டமைக்கப்பட வேண்டியது மிக அவசியமானதாயிருக்கிறது. இந்த மனிதாபிமான விடயத்தில் கருணையுள்ளவர்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியதன் பாரிய பொறுப்பிருக்கிறது.

இனியவாழ்வு இல்ல இயக்குனர் : ராஜ்குமாரின் தொலைபேசி 0771102405

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக